திருச்செந்தூரில் காணக்கிடைக்காத காட்சி.. நெகிழ்ந்த வயதான பக்தர்கள்.. இந்து அறநிலையத்துறை சூப்பர்
தூத்துக்குடி: "இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் ஆன்மிக பயணமாக அழைத்து செல்லப்படும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. 3-ம் கட்டமாக நெல்லை, மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மண்டலங்களை சேர்ந்த 207 மூத்த குடிமக்கள் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று திருச்செந்தூரில் பயணம் தொடங்கி உள்ளது.
திருப்பரங்குன்றம் , திருச்செந்தூர் , பழனி , சுவாமிமலை , திருத்தணி , பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு தலங்கள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளாக போற்றப்படுகிறது. இதில் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை ஆகியவை மதுரை மாவட்டத்திலும், திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்திலும், பழனி திண்டுக்கல் மாவட்டத்திலும் உள்ளது. சுவாமிமலை தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருத்தணி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக திருப்பரங்குன்றம் போற்றப்படுகிறது. மதுரை மாநகரில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் இருக்கிறது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
மூன்றாம் படை வீடாக பழனி போற்றப்படுகிறது. நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
முருகனின் நான்காவது படைவீடு சுவாமிமலை ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளது. தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு முருகன் சுவாமிநாதன் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்.
திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இந்த மலையில் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாக சொல்லப்படுகிறது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சிதராலும் பாடப்பட்ட தலமாகும்.
பழமுதிர்சோலை - முருகனின் ஆறாம் படைவீடாக போற்றப்படுகிறது. அழகர் கோவில் அமைந்துள்ள சோலை மலையில் முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தார் என நம்பப்படுகிறது. சோலை மலை முருகன் என கோயில் போற்றப்படுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை திகழ்கிறது. முருகப்பெருமாளின் அறுபடை வீடுகளை தரிசிக்க பலர் விரும்புவார்கள். அப்படி விரும்பும் மூத்த குடிமக்களை அரசு இலவசமாக அழைத்து சென்று தரிசனம் செய்ய வைக்கிறது. இந்து அறநிலையத்துறை இந்த சேவையை செய்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் ஆன்மிக பயணமாக அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள்.
3-ம் கட்டமாக நெல்லை, மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மண்டலங்களை சேர்ந்த 207 மூத்த குடிமக்கள் அறுபடை வீடு ஆன்மிக பயணத்தை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். இவர்களது ஆன்மிக பயணம் இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்செந்தூரில் இருந்து புறப்படுகிறது. இந்த பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப் போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழி பைகள் வழங்கப்படுகின்றன.
இவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர். திருச்செந்தூரை தொடர்ந்து திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருத்தணி, பழனி ஆகிய படை வீடுகளுக்கு செல்லும் இந்த பயணம் 24-ந் தேதி நிறைவடைகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதனிடையே இன்று பயணம் இனிதே தொடங்கிய நிலையில் மூத்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications