அவதூறு பரப்பினால்.. தப்பான போட்டோவுடன் சித்தரித்தால் பல கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரனும்.. சசிகலா புஷ்பா
தூத்துக்குடி: தம்மைப் பற்றி தவறான வதந்திகள் பரப்புவது, தவறான போட்டோக்களுடன் சித்தரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியது இருக்கும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் முன்னாள் எம்.பி. என்ற அடிப்படையில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. அதை காலி செய்ய சொன்னார்கள். டெல்லியில் எங்கள் சொந்த வீட்டுக்கு அரசு பங்களாவில் இருந்த பொருட்களை எடுத்து செல்ல நினைத்தேன். ஆனால் செய்யாமல் விட்டுவிட்டோம். இதனால் அரசு பங்களாவில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்திருக்கின்றனர். இது சாதாரணமானதுதான்.

வதந்தி பரப்பினர்
ஆனால் டெல்லி அரசு பங்களாவில் உல்லாசவிடுதி நடத்தியதாக தவறான தகவலை, வதந்தியை பரப்பி இருக்கின்றனர். இது தொடர்பாக தூத்துக்குடி ராஜவேல் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. நீங்கள் கட்சி ரீதியாக, சித்தாந்த ரீதியாகத்தான் மோத வேண்டும்; பெண் என்பதற்காக நீங்கள் அவதூறு பரப்பினால் வீடுகளில் ஒளிந்து கிடப்பார்கள் என நினைக்கக் கூடாது.

அரசியலில் பெண்கள்
பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என நினைக்கிறார்களா? பெண்கள் அரசியலுக்கு வந்தாலே தவறாக சித்தரிக்கின்றனர். பெண் அரசியல்வாதிகளுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நாங்களும் நீங்கள் சார்ந்திருப்பது போல ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக வளர்ச்சி
தூத்துக்குடியில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு நான் பொறுப்பாளர். அதனால் தூத்துக்குடியில் நிறைய பணிகள் இருக்கின்றன. இப்போது நான் அடிக்கடி டெல்லி செல்வதும் இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக அதிகமாக வளர்ந்துள்ளது. இது திமுகவின் கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்கும் நன்கு தெரியும்.2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல்களில் பாஜகதான் வெற்றி பெறும். தூத்துக்குடியில் என் மீது திட்டமிட்டு அவதூறு பிரசாரம் செய்கின்றனர். கோவை சம்பவத்தை திசை திருப்பவே இப்படியான தகவல்களை பரப்புகின்றனர். தூத்துக்குடி வளர்ச்சிக்காக நான் முன்வைத்த 10 கோரிக்கைகள் என்ன ஆனது என்பது என் கேள்வி. அதற்கு பதில் தர முடியாமல்தான் இப்படியான அவதூறுகளை பரப்பி விடுகின்றனர்.

அவதூறு பரப்பினால்...
இனிமேல் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பினால், தவறான படங்களை சித்தரித்து பரப்பினால் வழக்குகள் பாயும். அத்துடன் பல கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் நேரிடும். நான் கொடுத்துள்ள புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.












Click it and Unblock the Notifications