தாயின் உயிரை காப்பாற்ற.. பாம்பிடம் கடிவாங்கி உயிரிழந்த சிறுவன்.. கோவில்பட்டியில் சோகம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தாயை காப்பாற்ற முயற்சி செய்து 5 வயது சிறுவன் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் உள்ள தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்.
இவருடைய மனைவி அர்ச்சனா. வாய் பேச முடியாதவர். இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (வயது 5), சுபாஷ் (3) என்ற 2 மகன்கள் உண்டு.

சமையல் கட்டுக்கு வந்த பாம்பு
சிறுவன் கார்த்திக் ராஜா எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுபவர். மேலும் தாய் மீது அதிக பாசம் கொண்டவர். வழக்கம் போல் நேற்று இரவு அர்ச்சனா சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அம்மாவுடன் பேசிக்கொண்டபடி கார்த்திக் ராஜாவும் அங்கு இருந்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டு சுவரின் அருகில் இருந்த சிறிய ஓட்டையில் நல்ல பாம்பு ஒன்று நெளிந்துகொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அச்சிறுவன் அதிர்ச்சியடைந்தான்.

பாம்பை விரட்ட முயற்சி
மேலும் அந்த பாம்பு சமையல் கட்டை நோக்கி சென்றதாக தெரிகிறது. இதனால் பயந்து போன கார்த்திக் ராஜா சமையல் கட்டில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் அம்மாவை கடித்து விடக்கூடாது என்பதற்காக, அங்கு கிடந்த ஒரு கம்பை எடுத்து பாம்பை விரட்ட முயற்சித்துள்ளார். எனினும் பாம்பு சமையல் கட்டு பக்கமே செல்ல முயன்றதால் தாயின் உயிரை காப்பாற்ற நினைத்து, அந்த சிறுவன் பாம்பை மீண்டும் விரட்ட முயன்றுள்ளான். ஆனால் நல்ல பாம்பு அச்சிறுவனை கடித்து விட்டு தப்பி சென்றது.

சிறுவன் பலி
இதற்கிடையே பாம்பு கடித்ததில் சிறுவன் கார்த்திக் ராஜா பாம்பு கடித்துவிட்டது என அய்யோ அம்மா என கதறி கீழே விழுந்து மயக்கமடைந்தான். இதனால் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், அக்கம் பக்கத்தினரை அழைத்து மகனை கடம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகத்தில் கிராமம்
இதையடுத்து கடம்பூர் போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயைக் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து சிறுவன் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications