சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்! 4 நிமிடத்தில் பேசி முடித்த அமைச்சர் கீதாஜீவன்! என்ன காரணம் தெரியுமா?
தூத்துக்குடி: திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கீதா ஜீவன், நான்கே நிமிடத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மழையில் நனைந்து சிரமப்படக் கூடாது என்பதற்காகவே தனது பேச்சை அவர் வேகமாக முடித்தார். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.
தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 1,222 இடங்களில் மூன்று நாட்கள் நடைபெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியபுரத்தில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டார்.
மழை வருவது போல் இருந்ததால் கூட்டத்தை வேகமாக முடித்துவிட திட்டமிடப்பட்டது. இதனால் நேராக அமைச்சர் கீதாஜீவன் பேசத் தொடங்கினார். ஆனால் அதற்குள் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
சாரல் மழையாக ஆரம்பித்து கொஞ்சம் கணமாக பெய்யத் தொடங்கியதால் அரசின் முக்கிய சாதனைகளை மளமளவென 4 நிமிடத்தில் பட்டியலிட்டு முடித்தார். குறிப்பாக வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கவுள்ளது பற்றி நினைவூட்டி கொட்டிய மழையிலும் கைதட்டல்களை அள்ளினார்.
''பாவம் நீங்களெல்லாம் மழையில் நனைந்து சிரமப்படுறீங்க, அதனால் பேச்சை நிறைவு செய்கிறேன்'' எனக் கூறி மேடையிலிருந்து புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் கீதாஜீவன்.












Click it and Unblock the Notifications