அனைத்து கட்சி கூட்டத்திற்கு பாஜக வர வேண்டும்.. அப்படி நடந்தால் பாதிப்பு.. விளக்கமாக சொன்ன கனிமொழி!
தூத்துக்குடி: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி கேட்டு கொண்டுள்ளார். பாஜகவும் அந்த கூட்டத்தில் பங்கேற்று கருத்தை கூற வேண்டும் என்று கூறியுள்ள அவர், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றால் தமிழ்நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று சில கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியமான அழைப்பு ஒன்றை விடுத்தார். அதில், இவன் என்ன அழைப்பது, நாம் என்ன போவது என்று கெளரவம் பார்க்காதீர்கள்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு வர முடியாது என்று சொன்னவர்கள் தயவு கூர்ந்து வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதனை அரசியலாக பார்க்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒரு விவாதம் நடக்க வேண்டுமல்லவா.. அந்த விவாதத்திற்கு கூட ஒரு சில கட்சிகள் வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். பாஜகவும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று அவர்களின் கருத்தை முன் வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது. ஆனால் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை குறையவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எம்பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எம்பி-க்கள் எண்ணிக்கை குறைக்கப்படவோ அல்லது அதே நிலை தொடரவோ வாய்ப்புகள் உள்ளது. மொத்தமாக உள்ள 543 எம்பி-க்களில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான எம்பிக்களின் சராசரி 7.18 சதவிகிதமாகும். ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், அதன் சதவிகிதம் 5ஆக குறைய வாய்ப்புகள் உள்ளது.
இதனால் தென் மாநிலங்களில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். இதுதொடர்பான தெளிவான பதிலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ கூறவில்லை. இந்த பயம் நியாயமான அச்சம். இதில் தெளிவு பெற்றால் மட்டுமே பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும். இதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சி கூட்டம் மூலமாக ஒருமித்த கருத்தை எழுப்ப முடியும். திமுகவின் நிலைப்பாடு என்பது தென் மாநிலங்களும், மக்கள் தொகையை குறைத்த மாநிலங்களும் பாதிக்கப்படக் கூடாது. தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்தால், தமிழ்நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications