பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எடுத்த அதிரடி முடிவு
தூத்துக்குடி: தமிழகத்தில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறி முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை.. அதை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் ஆசிரியைகளின் பதவி உயர்வுக்கு எதிரான அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை வலியுறுத்தியுள்ளார்.
வரும் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இதுபற்றி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறும் போது, ஜாக்டோ-ஜியோ தனது நியாயமான 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கை அளித்தார். தேர்தலில்வாக்குறுதியும் அளித்து உறுதிப்படுத்தினார்.
அதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 ஆம் மாநில மாநாடு மற்றும் 2022 ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, தான் அளித்த வாக்குறுதியை மறக்கவில்லை, மறுக்கவில்லை, மறைக்கவில்லை என மீண்டும் எங்களுக்கு நம்பிக்கை தந்தார். ஆனால், 4 ஆண்டுகள் கழிந்தும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
இதனால் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட எங்களிடம், 5 பிப்ரவரி 24 ஆம் தேதி நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு பேச்சவார்த்தைக்கு அழைத்து. நான்கு வார கால அவகாசம் தெரிவித்து, அதற்குள் கோரிக்கைகள் குறித்து முடிவெடுப்பதாக நம்பிக்கை அளித்தனர். தொடர்ந்து, மார்ச் 13 ஆம் தேதி மீண்டும் ஜாக்டோ-ஜியோவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த தமிழ்நாடு முதல்வர், மூன்று குழுக்களாக சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து நம்பிக்கை தந்தார்..
அதன் அடிப்படையில், நடப்பு பட்ஜெட்டில் 12 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், 2025-2026 பட்ஜெட் அறிவிப்பில் எங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.. ஏமாற்றமே கிடைத்தது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியாகி உள்ளன. இதனால் தான் நாங்கள் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.
இந்த நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைப் பேரணி நடத்திட முடிவு செய்துள்ளோம்.
தொடர்ந்து மே 24 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்திருக்கிறோம். கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.இதுபற்றி மாநாட்டில் அறிவிப்போம்" என்றார்கள்.
இதனிடையே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது, நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவோம் என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறோம். பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தி இருக்கின்றன.
மேலும், தமிழகத்தில் ஆசிரியைகளின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 243-ஐ உடனே ரத்து செய்ய வேண்டும். சிறுபான்மை பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்துக்கு டி.இ.டி. தேர்வு தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி வழங்காமல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், அலைக்கழித்து வருகிறார்.
ஆகவே தமிழக அரசு சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் கூட்டணியின் மாநில மாநாடு திண்டுக்கலில் நடைபெற இருக்கிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். முன்பகை காரணமாக குற்றம் சுமத்துபவர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications