நாளை சூரசம்ஹாரம்.. குலசை கடற்கரையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்! ஏற்பாடுகள் தீவிரம்
தூத்துக்குடி: பிரசித்திப்பெற்ற குலசை தசராவின் 10ம் நாள் விழாவான நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரள உள்ளதால் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மைசூர் தசராவுக்கு அடுத்து இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றது என்றால் அது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்படினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் தசரா விழா தான். குலசேகரப்பட்டினம் என்பது கடற்கரை கிராமமாகும். இங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் தான் ஆண்டுதோறும் 10 நாட்கள் தசரா விழா என்பது நடக்கும்.

இங்கு முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பதால் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலில் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் வீற்றிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா என்பது நடக்கும். இந்த ஆண்டு குலசை தசரா விழா கடந்த அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து தசரா விழாவில் பங்கேற்று வருகின்றனர். அதேபோல் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேடமணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று வருகின்றனர்.
வீடு தேடி ஆடி வரும் தெய்வங்கள்.. பக்தர்களின் நேர்த்தி கடனால் தென்மாவட்டங்களில் களைகட்டிய குலசை தசரா
இன்று 9 வது நாள் விழா நடக்கிறது. நாளை 10வது நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. குலசை தசராவின் சிகர நிகழ்ச்சி என்பது 10வது நாளான நாளை நடைபெற உள்ளது. நாளை மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெறும். அங்கு மகிஷாசுர வதம் நடைபெறும். முதலில் மகிஷனின் தலை, அடுத்து சிம்ம தலை, பின்னர் மகிஷாசுரனின் தலையினையும் கொய்து வெற்றிக்கொடியை அம்மன் நாட்டுவாள்.
இந்த நிகழ்ச்சி நாளை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியை காண பல ஊர்களில் இருந்துலட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.அதேபோல் நாளையும் ஏராளமானவர்கள் குலசை செல்ல உள்ளனர். இதனால் சூரசம்ஹார நிகழ்ச்சி மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு தேவையான ஏற்பாடுகள் என்பது விரிவாக செய்யப்பட்டு வருகிறது.
குலசை தசராவுக்கு போறீங்களா?.. பக்தர்களுக்கு புது ரூல்ஸ்.. தூத்துக்குடி எஸ்பி ஸ்டிரிக்ட் ஆர்டர்
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு 11வது நாளில் பக்தர்கள் விரதத்தை முடித்து காப்பு களைவார். அதாவது நாளை மறுநாள் மாலையில் முத்தாரம்மனுக்கு காப்பு களையப்படும். அதன்பிறகு பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். பிறகு அக்டோபர் 14ம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனை, மதியம் பாலாபிசேகம், புஷ்ப அலங்காரத்துடன் விழா நிறைவு பெறும்.












Click it and Unblock the Notifications