பட்ட பகலில் அரசு அதிகாரியின் வீட்டிற்குள் புகுந்து.. பெரிய சம்பவம்.. அதிர்ந்த தூத்துக்குடி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் பட்ட பகலில் 48 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து ராஜீவ்நகர் 6-வது தெருவைச் சேர்ந்த 57 வயதாகும் சிங்கராஜ் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாமா. இவரது மகன் மனோகரன். மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி பாமா தனது மகன் மனோகரனுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் சிங்கராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.
கடந்த 8ம் தேதி காலையில் கயத்தாறு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்கராஜ் வழக்கம் போல் வேலைக்கு போய்விட்டார். இரவில் அவர் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து திடுக்கிட்டார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தது.. இதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைரேகை நிபுணர் வேல்முருகன், வீட்டில் ஆய்வு செய்து ரேகைகளை பதிவு செய்தார். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய நிலையில் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் யாருமே இல்லாததை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டில் புகுந்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது உறுதியாகி உளள்து. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications