திருச்செந்தூரில் சுமார் 100 அடிக்கு உள்வாங்கிய கடல்.. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் பக்தர்கள்
தூத்துக்குடி: திருச்செந்தூரில் 100 அடிக்கு கடல் உள்வாங்கி உள்ளது. பச்சை நிற பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிவதால் ஆபத்தை உணராமல் பக்தர்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி போன்ற கனத்த நாட்களில் கடல் உள்வாங்கும். சில நேரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் கடற்கரையை தாண்டி வெளியே அலையடிக்கும்.
இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கி உள்ளது. கடல் உள்வாங்கியதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அங்கு நின்று பக்தர்கள் சிலர் செல்ஃபி எடுத்து வந்தனர். அண்மைக்காலமாக நிறைய சிலைகள், கல்வெட்டுகள் எல்லாம் கரை ஒதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கடல் உள்வாங்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அறிவுறுத்தி வருகின்றனர். கடலில் நீராடும் பக்தர்கள் கவனமான முறையில் நீராடுமாறு கோயில் நிர்வாகம் சார்பாக ஒலிபெருக்கி மூலமாகவும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மூலமும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications