இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர்
தூத்துக்குடி/ கொழும்பு: வளைகுடாவில் நிலவும் நிச்சயமற்ற நிலை. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது போன்ற சூழல்களுக்கு மத்தியில் இலங்கைக்கு 38 ஆயிரம் டன் பெட்ரோல், டீசலை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. அந்த கப்பல் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சென்று சேர்ந்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ளனர். இந்த போர் காரணமாக உலகம் முழுவதும் கேஸ், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியா, ஜப்பான், தென்கொரியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து உள்பட பல்வேறு ஆசிய நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. ஓரளவு சேமிப்பு உள்ளது. எனினும் கேஸ் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக வணிக சிலிண்டர் கிடைப்பது சவாலாக உள்ளதால், வீட்டு சிலிண்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மறுபுறம் வீட்டு சிலிண்டர் 50 நாட்களுக்கு மேல் மக்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது. ஆனால் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு. எனினும் அண்டை நாடான இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
2002ல் இருந்தது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க அந்த நாட்டில் புதன்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நான்கு சக்கர வாகனத்துக்கு ஒரு வாரத்துக்கு 15 லிட்டர் பெட்ரோல், இரு சக்கர வாகனத்துக்கு ஒரு வாரத்துக்கு 5 லிட்டர் பெட்ரோல் மட்டுமே விநியோகம் செய்யும் நிலை இருக்கிறது.. பெட்ரோல், டீசல் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஈரான் அமெரிக்கா போர் காரணமாக இலங்கையில் நிலக்கரி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் அனல் மின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாள்தோறும் பல மணி நேரம் மின் வெட்டு அமலாகி உள்ளது. இந்த சூழலில் இலங்கைக்கு நட்பு ரீதியாக உதவிக்கரம் நீட்டி உள்ளது. இலங்கைக்கு 38,000 டன் எரிபொருளை இந்தியா வழங்கி உள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அதிபர் அனுர குமார திசாநாயக்க சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறுகையில்," அண்மையில் முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அவரிடம் எடுத்துரைத்தேன். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு 38,000 டன் எரிபொருளை இந்தியா வழங்கி உள்ளது. இந்தியாவின் விரைவான உதவிக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எங்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பெட்ரோல் விலை 398 இலங்கை ரூபாய் ஆக இருக்கிறது. இது இந்திய மதிப்பில் 120 ரூபாய் ஆகும. டீசல் விலை 382 இலங்கை ரூபாய் ஆக இருக்கிறது. இது இந்திய மதிப்பில் 115 ரூபாய் ஆக உள்ளது. கடந்த மார்ச்21ம் தேதி விலை உயர்த்தப்பட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. தூத்துக்குடியில் இருந்து செல்லும் சிறிய மற்றும் நடுத்தர ரகக் கப்பல்கள் கொழும்பு மற்றும் திரிகோணமலை துறைமுகங்களுக்குத் தொடர்ச்சியாக எரிபொருளைக் கொண்டு சென்று வருகின்றன. இலங்கையில் சீனா தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயலும் சூழலில், இந்தியா இதுபோன்ற அத்தியாவசியத் தேவைகளை (பெட்ரோல், டீசல், உணவு) உடனுக்குடன் பூர்த்தி செய்வதன் மூலம் தனது உறவை வலுப்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications