ஸ்ரீவைகுண்டத்தில் ஷாக்.. நடந்து வந்த பள்ளி மாணவர் கடத்தல்.. 2 சிறுவர்களிடம் போலீஸார் விசாரணை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் அருகே பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்த அரசுப் பள்ளி மாணவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குரங்கணி காட்டேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கசாமி. இவரது மகன் அபினேஷ் (16). இவர் மாவடிப் பண்ணையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்த நண்பர்களை அழைத்துள்ளார்.

கூட்டாம்புளியில் இருந்து வந்தவர்கள் பிறந்தநாள்விழா கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் தெருவில் வசிப்பவர்களுக்கு இடையூறாக சாலையில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளனர். இதனை அபினேஷின் தந்தை தங்கசாமி கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து அவர்களைக் கண்டித்து அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில், கூட்டாம்புளியைச் சேர்ந்த மூன்று பேர் தங்கசாமியைத் தேடி நேற்று மாலை வந்துள்ளனர். அவர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவர் இல்லாதால், பள்ளி முடித்து நடந்து வந்து கொண்டிருந்த தங்கசாமி மகன் அபினேஷை தங்களது பைக்கில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து அபினேஷின் அண்ணன் முத்து நாராயணனிடம் உங்கள் தம்பியை நாங்கள் கடத்திச் செல்கிறோம் என்று கூறிவிட்டு போனை துண்டித்துள்ளனர்.
இதனால், அச்சமடைந்த சகோதரர் தனது தந்தையிடம் விபரத்தை கூறியுள்ளார். தொடர்ந்து தந்தை இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அவர்கள் சென்ற இடத்தை பின் தொடர்ந்தனர். அதற்குள் கூட்டாம்புளி மெயின்ரோட்டில் அபினேஷை இறக்கிவிட்டு விட்டு மூன்று பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அபினேஷின் தந்தை தங்கசாமி அளித்த புகாரின் பேரில் 2 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு நபரை தேடி வருகின்றனர். தந்தை மீதுள்ள கோபத்தில் பள்ளிச் சென்று திரும்பிய பள்ளி மாணவனை இளைஞர்கள் சேர்ந்து கடத்திச் சென்ற சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications