தமிழக விவசாயிகளே 42000 ரூபாய் கிடைக்கும்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. எப்படி பெறுவது?
தூத்துக்குடி: தமிழக அரசின் சிறப்பினமாக திட்டத்தில் தேர்வாகும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் கூடுதலாக 20 சதவீத சிறப்பு மானியத்துடன் எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும் என்று தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
மானாவாரி விவசாயத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் உருவாக்குவதற்கு விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இது குறித்து தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ஒருங்கிணைந்த பண்ணையம் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டமானது விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங்களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்தவும், பயிர் சாகுபடி முறையில் அதிகபட்ச உற்பத்திக்கான நுட்பங்களை பயன்படுத்தவும், பண்ணை கழிவுகளை உற்பத்தி நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்யவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு பால், கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலம் ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்க வழி செய்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மானாவாரி பகுதி வளர்ச்சிக்கான துணை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு கருங்குளத்தில் 40 எக்டேரிலும், ஓட்டப்பிடாரத்தில் 20 எக்டேரிலும், விளாத்திகுளத்தில் 100 எக்டேரிலும், புதூரில் 120 எக்டேரிலும், கயத்தாரில் 120 எக்டேரிலும், கோவில்பட்டியில் 100 எக்டேரிலும் செயல்படுத்த ரூ.1.5 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக வேளாண்மைத்துறை மூலம் 500 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தது ஒரு எக்டேர் நிலஉரிமை உடையவராக இருக்க வேண்டும். மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், மண்புழு உர தொட்டி மற்றும் கால்நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக்கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்புப் பெட்டி போன்றவற்றை திட்ட வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும்.
இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை உருவாக்கிய விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே கருங்குளம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், கயத்தார் மற்றும் கோவில்பட்டி வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேலும் இந்த திட்டத்தில் தமிழக அரசின் சிறப்பினமாக திட்டத்தில் தேர்வாகும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் கூடுதலாக 20 சதவீத சிறப்பு மானியத்துடன் எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications