வேகமான முன்னேற்றம்! தூத்துக்குடிக்கு லக் மேல் லக்! நினைத்தவுடன் இனி சர்ர்ன்னு பறக்கலாம்! குட் நியூஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல்வேறு பூங்காக்கள் தமிழ்நாடு அரசு மூலம் அமைக்கப்பட உள்ள நிலையில் அங்கு புதிய விமான சேவைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் வேகமாக முன்னேறிய நிலையில் தென் மண்டல மாவட்டங்களை சரியாக கவனிக்கவில்லை என்ற குறை மக்கள் மத்தியில் இருந்து வந்தது. தென் தமிழகத்திற்கு போதிய திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை, தொழிற்சாலைகள் கொண்டு வரப்படவில்லை என்ற குறை மக்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்த நிலையில்தான் தென் மாவட்டங்களையும் முன்னேற்றும் வகையில் சமீபத்தில் தூத்துக்குடியில் பல்வேறு பூங்காக்கள், மின் உற்பத்தி மையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வேலைவாய்ப்பு
பல்வேறு முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தூத்துக்குடியில் அமைய உள்ள பர்னிச்சர் பூங்காவிற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பூங்கா மூலம் சுமார் ரூ.4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பர்னிச்சர் தொழில் பூங்கா மூலம் ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சூரிய மின்சக்தி
அதேபோல் இங்கு மிதவை சூரிய மின் சக்தி பூங்காவும் அமைக்கும் பணிகளும் இங்கே தொடங்கி உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு பணிகளும் முடிந்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டின் மின்சார தேவை பெருமளவில் பூர்த்தி செய்யப்படும். இந்த நிலையில்தான் தூத்துக்குடியில் புதிய விமான சேவைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதன்படி பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி விமான சேவை ஏற்படுத்தப்பட உள்ளது.

பெங்களூர் தூத்துக்குடி
மார்ச் 27ம் தேதி தூத்துக்குடி-பெங்களூரு இடையே தினசரி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இங்கு தற்போது ஓடுபாதை 1,350 மீட்டராக உள்ளது. இதை 3,115 மீட்டராக மாற்றும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை செய்து வருகிறது. இதற்காக ரூ.380 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் பின் இங்கு மேலும் பல விமான சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. தூத்துக்குடியில் பல்வேறு பூங்காக்கள், தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ள நிலையில் இந்த விமான சேவை பயனுள்ளதாக இருக்கும்.

தூத்துக்குடி
அதேபோல் தூத்துக்குடி-நாகப்பட்டினம் இடையே 6 வழி சாலை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இதற்கான ஆய்வுகள் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு வருடத்திற்குள் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கும். அதன்பின் சாலைகள் விரிவுபடுத்தப்படும். அடுத்தடுத்த திட்டங்கள் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி வேகமாக முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications