மேடை போடுங்க விவாதிக்க தயார்.. வன்னியர்களுக்கு துரோகம் செய்தது திமுக! வேலூரில் கொந்தளித்த அன்புமணி
சென்னை: தகவல் சேகரிக்கிறோம் என்று சொல்லியே ஏமாற்றிய திமுகவிற்கு ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயத்தினரும் பாடம் புகட்ட வேண்டும் என்றும், வன்னியர்களுக்கும் பட்டியல் இனத்தவர்களுக்கும் துரோகம் செய்தது திமுக என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொது குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
இந்த பொதுக்குழுவில் வேலூரில் தலைவிரித்தாடும் கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், வேலூர் மாநகர சாலைகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பொதுக்குழுவில் பேசிய அன்புமணி," டிஎன்பிஎஸ்சியில் திமுக குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக நடத்தவில்லை. இந்திய எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்கள் நடத்தினார்கள். அதில் திமுக இணைந்து கொண்டது. டிஎன்பிஎஸ்சியில் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்கவில்லை. திக -வில் ஏன் அண்ணாதுரை சேர்ந்தார் என கேள்வி கேட்டு வைத்திருக்கிறார்கள்.
நான்கு ஆண்டுகளாக இட ஒதுக்கீடு தருகிறோம் என ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். இட ஒதுக்கீடு தருகிறோம் என நம்பிக்கையாக கூறியதால் தான் போராட்டம் நடத்தவில்லை. ஒவ்வொரு முறையும் போராட்டம் அறிவிக்கும் போது இட ஒதுக்கீடு கொடுத்து வருகிறோம் என கூறினார்கள். தகவல் சேகரிக்கிறோம் என்று சொல்லி சொல்லியே, ஏமாற்றிய திமுகவிற்கு ஒட்டுமொட்ட வன்னியர் சமுதாயத்தினர் பாடம் புகட்ட வேண்டும். வன்னியர்களுக்கும் பட்டியல் இனத்தவர்களுக்கும் துரோகம் செய்தது திமுக
எங்கு வேண்டுமானாலும் மேடை போடுங்கள், விவாதிக்க நான் தயார். 2021 தேர்தலில் திமுகவில் உள்ள எம்எல்ஏக்களில் அதிக எம்எல்ஏக்கள் உள்ள சமுதாயம் வன்னியர் சமுதாயம் தான். 23 சட்டமன்ற உறுப்பினர்கள் வன்னியர்கள், 21 சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள். இரண்டு சமுதாயத்திற்கும் திமுக எதுவும் செய்யவில்லை. இரண்டு சமுதாயத்திற்கும் துரோகம் செய்து இருக்கிறது. யாருடனும் விவாதம் நடத்த தயார் மேடையை போடுங்கள் நான் வருகிறேன்.
நீங்கள் ஆட்சியில் இருப்பதற்கு காரணமே இரண்டு சமுதாயம் தான். இரண்டு சமுதாயத்திற்கும் என்ன செய்தீர்கள். கொடுங்கோல் ஆட்சி திமுக ஆட்சி. ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.5 விழுக்காடு மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. நான்காண்டுகளில் நான்கு முறை மின்கட்டணத்தை உயர்த்திய கொடுங்கோல் ஆட்சி திமுக ஆட்சி. ஆண்டுதோறும் மின்சாரத் துறையில் 45 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம் வருகிறது.
45 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம் வந்தாலும் பத்தாயிரம் கோடி நஷ்டம் என கூறுகிறார்கள். எப்படி நஷ்டம் வரும்? 45 ஆயிரம் கோடி வருவதற்கு முன்பு 20 ஆயிரம் கோடி நஷ்டம் என்றார்கள். 45 ஆயிரம் கோடி வந்த பிறகும் பத்தாயிரம் கோடி நஷ்டம் என்கிறார்கள். தனியாரிடமிருந்து 3,200 கோடி யூனிட் மின்சாரம் தனியாரிடம் வாங்குகிறார்கள். அரசு மூன்று ரூபாய், 3.75 ரூபாய்க்கு மின்சாரம் தயாரிக்கிறார்கள். ஆனால் தனியாரிடமிருந்து 15 ரூபாய்க்கு மின்சாரம் வாங்குகிறார்கள். அரசு மின்சாரத்தை தயாரிக்கும் யோசனை அவர்களுக்கு இல்லவே இல்லை. தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டும் அவர்கள் கொடுக்கும் லஞ்சத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications