மாமா, மச்சான் என்னாத்துக்கு? என்னை வளர்த்த எம்ஜிஆரையே எதிர்த்தவன் நான்.. துரைமுருகன் சரவெடி
வேலூர்: என்னை படிக்க வைத்து வளர்த்த எம்ஜிஆரையே நான் சட்டசபையில் எதிர்த்து நின்றவன் என திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அரசியல் உலகத்தில் அண்ணன் என்னடா, தம்பி என்னடா என்றும் கேள்வி எழுப்பிய அவர் எதிர்க்கட்சி என்றால் வாளோடு செல்ல வேண்டும் என திமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாமா, மச்சான் என அழைப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "நாங்கள் எல்லாம் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறோம். எத்தனையோ பேர் எம்ஜிஆர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முதல்வர்களாக இருந்த காலங்களில் பணியாற்றியுள்ளோம்.
எப்போதுமே சட்டசபையில் மாமா மச்சான், வேண்டியவர் என்றெல்லாம் நட்பு பாராட்டியதே இல்லை. எதிரினா எதிரியாதான் இருக்கணும். சட்டசபைக்குள் என்ன சார் மாமா, மச்சான் உறவெல்லாம்? அண்ணன் என்னடா, தம்பி என்னடா அரசியல் உலகத்தில்? அதுதான் என் கேள்வி!
நாங்கள் அப்படித்தான் எங்கள் பணிக்காலத்தில் இருந்தோம். என்னை வளர்த்தவர் எம்ஜிஆர். 7 ஆண்டுகள் படிக்க வைத்தவர். என்னை அழைத்து , "வாடா, வந்து பதவி ஏத்துக்கோ" என அழைத்தார். ஆனால் நானோ "என் கட்சி திமுக, அந்த பதவியை ஏற்க முடியாது"னு சொல்லிட்டேன்.
அப்போது அவர், "உன் உறுதியை நான் பாராட்டுறேன்டா, இவ்வளவு உறுதியாக நீ இருப்பாய் என நினைக்கவில்லை" என்றார். அதற்கு நான், "உங்களை பார்த்து கட்சிக்கு வரவில்லை. அண்ணா திராவிட நாடு கேட்டாரே.. அப்போது ஒரு போராளியாக போக வேண்டும் என நினைத்து வந்தவன். எனக்கு அந்த சித்தாந்தம் நிற்கிறதே தவிர, யாரைப் பார்த்தும் நான் வரவில்லை" என சொன்னேன்.
எனது கல்யாணத்திற்கு சார்ட்டர் பிளைட்டில் வந்து 25 பவுன் செயின் போட்டுவிட்டு தானும் சாப்பிட்டுவிட்டு எல்லோரையும் சாப்பிட வைத்த எம்ஜிஆரையே நான் சட்டசபையில் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்டிருக்கிறேன்.
எதிர்க்கட்சி வாளோடு சட்டசபைக்கு செல்ல வேண்டும். ஆளும் கட்சி கேடயத்தோடு வர வேண்டும். எதிர்க்கட்சி வாளை சுழற்றினால் ஆளும் கட்சி அதை தடுக்கணும். இப்படித்தான் சட்டசபை நடக்கணும்" என துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
கடந்த சனிக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய துரைமுருகன், "சட்டசபையில் நேரலையில் பார்க்கும் போது பலர் மாமா, மச்சான் என உறவு முறை வைத்து அழைக்கிறார்கள். இப்படி அழைக்கக் கூடாது.
திமுக உறுப்பினர்கள் செயல்பாடுகள் சரியாக இல்லை என கட்சியினர் புகார் அளித்திருந்தனர். திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை செயல்பாடுகளை பார்த்தால் நானும் ஸ்டாலினும் சட்டசபைக்கு இந்த முறை வராமல் இருப்பதே நல்லது என தோன்றுகிறது". இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அப்போது பேசிய கே.என். நேரு, நாங்கள் நிச்சயம் சட்டசபையில் சரியாக செயல்படுவோம். ஆனால் ஆளும் கட்சியை எதிர்ப்பதை நேரலையில் காட்டுவதில்லை என நேரு புகார் தெரிவித்திருந்தார். செயற்குழுவில் துரைமுருகன் பேசியது வைரலானது.


Click it and Unblock the Notifications
