வேலூர் ஆட்டோவில் கருப்பு 'ஆடு'.. நிஷா தம்பதிக்கு வாணியம்பாடி கொடுத்த வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போனது.. சுமார் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் காணாமல் போயிருந்தது. இந்த ஆடுகளை எல்லாம் யார் திருடுகிறார்கள் என்று தெரியாமல் மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை, தர்மராஜர் தெருவை சேர்ந்த சபரி மற்றும் நிஷா தம்பதி தான் ஆட்டோவில் வந்து ஆடுகளை திருடி விற்பனை செய்ததாக தெரியவந்தது. அவர்கள் எப்படி சிக்கினார்கள் என்பதை பார்ப்போம்.
வேலூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஆடு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்பும், ஆடு வளர்ப்பும் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கிராம மக்களுக்கு கை கொடுத்து வருகிறது. இந்த சூழலில் பலர் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் கடந்த 6 மாத காலமாக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் காணாமல் போய் வந்தது. குறிப்பாக வாணியம்பாடியில் உள்ள ஜீவா நகர், நேதாஜி நகர், புதூர், ஷாகிராபாத், பஷீரா பாத், ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள் தொடர்ந்து திருடு போய்க்கொண்டே இருந்துள்ளது.

இதுபற்றி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் ஜீவா நகர், நேதாஜி நகர், புதூர், ஷாகிராபாத், பஷீரா பாத், ஆசிரியர் நகர் பகுதி மக்கள் புகார்கள் கூறிவந்தனர். ஒரு கட்டத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து கண்காணிக்கவும் செய்தனர். அதன்படி சிசிடிவி காட்சிகளில் ஆடு திருடியவர்கள் பற்றி அடையாளம் தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்காமல் தவித்து வந்த ஜீவா நகர் பகுதி மக்கள், ஒன்றிணைந்து ஒரு குழு அமைத்து வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆட்டு சந்தையில் தினந்தோறும் சென்று பார்த்து தங்களது ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதா? என தீவிரமாக கண்காணிக்க தொடங்கினார்கள்.
இந்நிலையில் இன்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் அதிகமாக வரும் என வியாபாரிகள் கூறினார்கள். இதன்படி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் இரவோடு இரவாக கே.வி.குப்பத்தில் உள்ள ஆட்டு சந்தையில் காத்திருந்த போது விடியற்காலை 4 மணிக்கு முதலாவதாக ஆடுகளை ஏற்றி வந்து தம்பதி விற்பனை செய்ய தொடங்கியிருக்கிறார்கள்..
அப்போது அங்கிருந்த ஜீவா நகர் பகுதி மக்கள் ஆட்டை வாங்குவது போல் சென்று வியாபாரம் பேசியிருக்கிறார்கள். இரண்டு ஆடுகள் 25 ஆயிரம் ரூபாய் என விலை பேசத் தொடங்கியுள்ளார்கள். அந்த தம்பதியினர் கொண்டு வந்த ஆடுகள், ஜீவா நகர் பகுதியை சேர்ந்தது என்பதை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் 10 பேர் கொண்ட கும்பல் தம்பதியினரை சரமாரியாக தாக்கினார்களாம்.. தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த ஆட்டோவில் அவர்களை அழைத்துக் கொண்டு சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகருக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆடுகளை திருடிய தம்பதியினர் வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை, தர்மராஜர் தெருவை சேர்ந்த சபரி மற்றும் நிஷா என்பது தெரியவந்தது. நிஷா சபரி தம்பதி, கடந்த 6 மாதங்களாக வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடும்பத்துடன் வந்து மேய்ச்சலுக்காக விடப்படும் ஆடுகளை குறி வைத்து, திருடி வந்து, வாரம் வாரம் சந்தையில் போய் விற்று வந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ஆடுகள் திருடிய தம்பதியை வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் ஆட்டோ மற்றும் ஆடுகளை பறிமுதல் செய்தனர். தொடர் ஆட்டுத் திருட்டில் ஈடுபட்ட தம்பதியினரை பொதுமக்களே தேடி கண்டுபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications