தடுமாறிய அமைச்சர்! தாங்கிப்பிடித்த மகன்! பதறிய திமுக நிர்வாகிகள்! பின்னணி காரணம் என்ன?
வேலூர்: திமுக மேடையில் அமைச்சர் துரைமுருகன் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் அவரை அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் திடீரென கீழே விழுந்ததை பார்த்த திமுக நிர்வாகிகள் பதறிப்போய் விட்டார்கள்.
இதனிடையே தனக்கு ஒன்றும் இல்லை எனக் கூறி மெதுவாக மேடையிலிருந்து இறங்கிய அமைச்சர் துரைமுருகன் கார் மூலம் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

உதயநிதி பிறந்தநாள்
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் மேடையிலிருந்து இறங்க முற்பட்ட அவர் திடீரென நிலை தடுமாறி அப்படியே சாய்ந்தார்.

தாங்கிப் பிடித்த மகன்
அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கதிர் ஆனந்த் எம்.பி. துரைமுருகனை அப்படியே தாங்கிப் பிடித்து தூக்கி நிறுத்தினார். அமைச்சர் துரைமுருகன் திடீரென கீழே சாய்வதை பார்த்த திமுக நிர்வாகிகள் பதறிப் போனார்கள். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக துரைமுருகன் தடுமாறினாரா அல்லது கால் தவறி தடுமாறினாரா எனத் தெரியவில்லை. ஆனால் அதற்குள் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மேடையிலிருந்து மெதுவாக படிக்கட்டுகளில் கீழிறங்கி கார் மூலம் வீட்டுக்குச் சென்றார்.

வயது மூப்பு
அமைச்சர் துரைமுருகனை பொறுத்தவரை 80 வயதை கடந்த நிலையிலும் கட்சிப்பணி, ஆட்சிப்பணி என ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சென்னைக்கும் தனது தொகுதியான காட்பாடிக்கும் தொடர்ந்து காரில் பயணித்து வருவதும் கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக ஏற்பட்ட உடல் சோர்வால் அவர் மேடையில் தடுமாறியிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உற்சாக பேச்சு
இதனிடையே முன்னதாக திமுக மேடையில் பேசிய துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் கட்சிக்கு ஆற்றி வரும் பணிகள் குறித்து பட்டியலிட்டார். மேலும், திமுக அரசின் சாதனைகள் மற்றும் முதல்வர் உழைப்பு குறித்து பேசினார்.












Click it and Unblock the Notifications