"குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம்" அமைச்சர் துரைமுருகன்!
வேலூர்: குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதன் முறையாக பதவியேற்றார். அவர் தலைமையிலான திமுக அரசு அமைந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.
ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. எனினும் திமுக அரசு அமைந்து ஒன்றரை ஆண்டுகல் நிறைவடைந்துள்ள உள்ள நிலையில், இதுவரை அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

எதிர்க்கட்சிகள் கேள்வி
இந்த வாக்குறுதி குறித்து அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே மகளிர் உரிமை தொகையாக ரூ.1000 வழங்குவதற்காக குடும்பத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதனால் விரைவில் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்படும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

புதுமைப் பெண் திட்டம்
அதேபோல் 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக அரசு அண்மையில் தொடங்கியது. இதுவும் மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
வேலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக புதியப் பாணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், யார் யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து வருகிறோம். ஒரு மாணவி 12ம் வகுப்பு படித்து வருகிறது. அதே மாணவி கல்லூரியில் சேர்ந்தால், புதுமைப் பெண் திட்டம் மூலம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை
அதேபோல் எங்களுக்கு கொடுக்கிறேன் என்று கூறினீர்களே ரூ.1000, அது எங்கே என்று கேட்கிறீகள். அதுவும் உறுதி. சில்லரை மாற்றிக் கொண்டிருக்கிறோம். விரைவில் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்படும். சொன்னபடி அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications