வேலூரில் பெண் வேடமிட்டு ரீல்ஸ் வெளியிட்ட 2கே "கிட்.." தேடி கண்டுபிடித்த போலீஸ்! மறக்க முடியாத பரிசு
வேலூர்: வேலூரில் கல்லூரிகள், பஸ் நிலையங்கள், சாலைகளில் வாலிபர் ஒருவர் பெண் வேடமிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார். கல்லூரி மாணவிகள் சாலைகளில் நடந்து செல்லும் போது அவர்கள் முன் அச்சுறுத்துவது போல் செல்வது, போக்குவரத்துக்கு இடையூறாக செல்வது, தலைகவசம் அணியாமல் ஊர் சுற்றுவது, மாணவிகள் முன், கெத்து காட்டி பைக்கில் ரேஸ் செல்வது என சுற்றி வந்த இளைஞர் சிக்கினார். அவர்குடியாத்தத்தை சேர்ந்த என்ஜினியரிங் மாணவர் என்பது தெரியவந்துள்ளது.
இன்றையே 2கே கிட்ஸ் இளைஞர்கள் சாகதத்தையும், பயணத்தையும் அதிகம் விரும்புபவர்களாக உள்ளனர். அதேபோல் தங்களின் சாகச திறமை வெளியே தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக தன்னுடன் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தெரிய வேண்டும் எனறு நினைக்கிறார்கள். இதற்காக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவது இன்றைய இளைஞர்களுக்கு மிக பிடித்த விஷயமாக மாறியுள்ளது.

பைக்கில் சென்றால் ரீல்ஸ், மழை பெய்தால் ரீல்ஸ், சாப்பிட்டால் ரீல்ஸ், குடித்தால் ரீல்ஸ், கல்லூரிகளில் நடனமாடி ரீல்ஸ் என அன்றாட நடவடிக்கைகளை ஆடல், பாடல் என குதுகலமாக பதிவிட்டு வருகிறார்கள். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ரீல்ஸ் எடுப்பதுதான் ஒரே பொழுதுபோக்காக செய்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் அதிக லைக் கிடைக்கும் என்பதால் இப்படி ரீல்ஸ் எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் சில இளைஞர்கள். அதேநேரம் சில இளைஞர்கள் மாணவிகளை சிரிக்க வைக்கவும், அவர்கள் முன்பு சீன் கிரியேட் செய்யவும், உடனே மற்றவர்களின் பார்வை நம் மீது பட வேண்டும் என்றும் சேட்டைகள் செய்கிறார்கள். அப்படித்தான் வேலூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு நவீன மோட்டார் பைக்கில் வேலூர் நகரில் வலம் வருவது போல் ரீலிஸ் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அந்த ரீல்ஸில் இளைஞர் ஒருவர் பெண் போல் சேலை உடுத்தி, தலையில் பூ வைத்து அலங்காரம் செய்து கொண்டு, ஜம்முன்னு பைக்கில் அமர்ந்து கல்லூரிகள், பேருந்து நிலையம் என முக்கிய சாலைகளில் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் பயணித்து வந்தார்.
அந்த இளைஞர் வேலூரில் கல்லூரிகள், பஸ் நிலையங்கள், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக செல்வதும், மாணவியை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது. வீடியோவுக்கு கிடைக்கும் லைக்குகளுக்காக இப்படி செயல்பட்ட மாணவனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.சில ஊடகங்களிலும் இதுபற்றி செய்திகள் வெளியானது. இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின்பேரில் பாகாயம் போலீசார் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், அந்த இளைஞர் குடியாத்தத்தை சேர்ந்தவர் என்பதும், ஆற்காடு அருகே ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. அந்த இளைஞரை போலீசார் பிடித்தனர். மேலும் அவர் நண்பர் ஒருவரின் மோட்டார்சைக்கிளை பயன்படுத்தி சாகசத்தில் ஈடுபட்டதும் உறுதியானது. அந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், குறிப்பிட்ட இளைஞர் கல்லூரியில் படித்து வருகிறார். அவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்திய பின்னர். அபராதம் விதிப்பது அல்லது எச்சரிக்கை செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்கள். இனிமேல் யாராவது செயல்பட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications