கூலி வேலை..தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள்..பாடி பில்டிங்கில் சாதித்த நம்ம ஊர் சிங்கப்பெண் சங்கீதா
திருப்பத்தூர்: ஆண்கள் மட்டுமே தடம் பதித்த வந்த உடல் கட்டழகு போட்டியில் கூலி வேலை செய்து தனது 2 பிள்ளைகளை படிக்க வைத்து கொண்டே தென்னிந்திய அளவிலான போட்டியில் தங்கம் வென்றுள்ளார் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் .
Recommended Video
கட்டழகான உடல் வேண்டுமா.. ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்க வேண்டுமா போன்ற விளம்பரங்கள் ஆகட்டும் அல்லது கட்டழகு உடல் என்றாலே அது ஆணழகன் போட்டிகள் தான் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே உள்ளது.
ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் இந்த தடைகளை தகர்த்தெரிந்து கட்டழகு போட்டிகளில் செய்து வருகின்றனர். ஆனால் நாம் பார்க்கப் போகும் இந்தப் பெண் இன்னும் சற்று வித்தியாசமானவர் தோளுக்கு மேல் வளர்ந்த இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டு கூலி வேலை செய்து கொண்டே கட்டுடல் போட்டிகளில் சாதித்து வரும் இந்த சிங்கப்பெண்ணின் பெயர் சங்கீதா.

கூலி வேலை செய்யும் பெண்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கீதா. தற்போது 35 வயதாகும் இவருக்கு சிறுவயதில் இருந்தே நிறைய சாதிக்க வேண்டும் என்பது லட்சியம். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாண்டியன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு தினேஷ் குமார் 12ஆம் வகுப்பு படிக்கும் மகன் மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் நந்தினி என்ற மகள் உள்ளனர்.

பாடிபில்டிங் ஆசை
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் சங்கீதா தொழிற்சாலைக்கு கூலி வேலைக்கு சென்று 2 பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார் மேலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக வாணியம்பாடி வாரச்சந்தை அருகே உள்ள பாரத் உடற்பயிற்சி மையத்தில் இணைந்து உடல் கட்ட அழகு போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

கடும் பயிற்சி
வறுமையின் காரணமாக அதுவும் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். பின்னர் தனியார் உடற்பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் ஒருவர் சங்கீதாவை அழைத்து உடற்பயிற்சி தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் விடா முயற்சியால் சாதிக்க முடியும் என்று சொல்லி தொடர் பயிற்சி அளித்து உதவியும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர பயிற்சி மேற்கொண்ட சங்கீதா மாவட்ட அளவிலான போட்டிகள் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வந்தார் .

பாடிபில்டிங்கில் சாதனை
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 2022 உடல் கட்டழகு போட்டி மற்றும் உடற் கட்டமைப்பு போட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்காசியில் நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு மற்றும் உடற் கட்டமைப்பு போட்டியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் சங்கீதா கலந்துகொண்டு தென்னிந்திய அளவிலான மிஸ்டர் உடல் கட்டழகு மற்றும் உடற்கட்டமைப்பு போட்டியில் (MR. SOUTH INDIA CHAMPION) பட்டம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். சாதிக்க பாலினம் வயது என எதுவும் தேவையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நம்ம ஊரு சங்கீதா அக்கா...












Click it and Unblock the Notifications