மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
வேலூர்: தபால்துறை நடத்தும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று வேலூர் கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
வேலூர் கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "இந்திய தபால்துறை பள்ளி மாணவர்கள் இடையே தபால்தலை சேகரிப்பில் ஆர்வத்தை தூண்டும் வகையில் 'தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஊக்கத்தொகையாக ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் பெறலாம்.

6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் கல்வித்தகுதி மற்றும் தபால்தலை சேகரிப்பை பொழுதுபோக்காக கொண்ட மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள முதன்மை அஞ்சல்துறை தலைவர் அலுவலகம் மூலம் நடத்தப்படும் வினாடி-வினா எழுதும் போட்டி மற்றும் தபால் தலைகள் திட்டம் ஆகிய இரு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
முதலாம்நிலை தேர்வில் வினாடி-வினாவுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், வரலாறு, அறிவியல், கலாசாரம், விளையாட்டு, பிராந்திய மற்றும் தேசியம் சார்ந்த புவியியல் மற்றும் தபால் தலை ஆகிய தலைப்புகளில் கேள்விகள் இடம்பெறும்.

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் 2-ம் நிலைக்கு தகுதி பெறுவார்கள். 2-ம் நிலை தேர்வில் தபால் தலைகள் திட்டம் என்ற தலைப்பில் தேர்வு நடக்கும். இதில், 16 தபால் தலைகளுக்கு மிகாமல் 500 வார்த்தைகளுக்குள் தங்களது செயல்பாட்டை சமர்ப்பிக்க வேண்டும். இதில், வெற்றி பெறுவோருக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த (ஸ்பார்ஷ்) விண்ணப்பம் சமர்ப்பிக்க அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி கடைசி நாளாகும்.
இதற்கான தேர்வு அக்டோபர் மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்குபெற விரும்பும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பள்ளிகளை தொடர்பு கொண்டு தபால்துறை ஊழியர்கள் மூலம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், வேலூர் கோட்டம், வேலூர்-632001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்." இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications