‛அரசியலை விட்டு போகிறேன்’.. சசிகலா காலில் விழுந்த எடப்பாடியின் போட்டோ காட்டி சவால்விடுத்த உதயநிதி
வேலூர்: லோக்சபா தேர்தலில் அமைச்சர் உதயநிதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே வார்த்தை போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் சசிகலா காலில் விழுந்த போட்டோவை காட்டி பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்ததோடு, அந்த சவாலை நிறைவேற்றினால் அரசியலை விட்டே போகிறேன் எனக்கூறி பரபரப்பை கிளப்பினார்.
வரும் லோக்சபா தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரத்தின்போது அவர் பிரதமர் மோடி, பாஜக, அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன், எடப்பாடி பழனிச்சாமி சிரித்தபடி நிற்கும் போட்டோவை காட்டி விமர்சனம் செய்தார். நானாவது எய்ம்ஸ் கல்லைத் தான் காட்டினேன். இங்கே ஒருவர் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார் பாருங்க என அந்த போட்டோவை காட்டி விமர்சித்து இருந்தார்.

இதற்கு இன்று தூத்துக்குடி பிரசாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்தார். பிரதமர் மோடியுடன், உதயநிதி ஸ்டாலின் சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை காண்பித்த எடப்பாடி பழனிச்சாமி, ‛‛நீங்களும் இத தானே காட்டுறீங்க. வேற எதாச்சு காட்டுறீங்களா?. நான் சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும். நீங்க காட்டுனா சரி. நான் காட்டுனா தவறா?. நான் கேட்கிறேன் சிரிக்கிறது தப்பா? ஸ்டாலினுக்கு சிரிப்பே வராது. எங்கேயாவது சிரிச்சி பார்த்திருக்கீங்களா'' என பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் தான் வேலூர் லோக்சபா தொகுதியின் திமுக வேட்பாளரும், அமைச்சர் துரை முருகனின் மகனுமான கதிர் ஆனந்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அறிவிக்கப்பட்டபோது சசிகலா காலில் விழுந்த போட்டோ எடுத்துக்காட்டி உதயநிதி விமர்சித்தார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‛‛நான் பிரதமர் மோடியை 2 முறை சந்தித்தேன். ஒரு முறை நீட் தேர்வில் ரத்து வேண்டும் என்று கேட்டேன். 2வது முறை சந்திப்பின்போது வெள்ள பாதிப்பின்போது நிவாரணம் வேண்டும் என கேட்டேன். இதனை பிரதமரை பார்த்து கேட்க எனக்கு தைரியம் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?.
எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று நான் பாஜகவிவிடம் கேட்டால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏன் கோபம் வருகிறது. இதற்கு பெயர் தான் கள்ளக்காதல். நான் இன்னொரு போட்டோவை காட்டுகிறேன். இதுமாதிரி இன்னொரு போட்டோவை காண்பித்தால் நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன்'' எனக்கூறி சவால் விட்டு சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழும் போட்டோவை உதயநிதி ஸ்டாலின் காண்பித்தார்.
மேலும், அந்த போட்டோவை அங்கிருந்த மக்களிடம் காண்பித்த உதயநிதி ஸ்டாலின், ‛‛யாருனு தெரியுதாம்மா.. இதுதான் எடப்பாடி பழனிச்சாமி. வெட்கம், மானம், சூடு, சொரனை இருந்தால் இந்த போட்டோவுக்கு பதில் சொல்லுங்கள். அதுக்கு அப்புறம் பேசிக்கொள்ளலாம்'' என காட்டமாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications