வாணியம்பாடி வீட்டு பீரோவில் கொட்டிய தங்க நகைகள்.. சபிதாவுக்கு செம துணிச்சல்! திருப்பத்தூர் திருப்பம்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த கொள்ளை சம்பவம், பெரும் பேரதிர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது.. அது கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தங்களுடைய விசாரணையை விரிவுபடுத்தியிருந்தனர்.. தற்போது அந்த கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது ?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நீலிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் இம்தியாஸ்... இவர் தோல் தொழிற்சாலையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.. இவரது மனைவி பெயர் சபிதா குல்சு.. இவர்களது வீட்டில் சக்திவேல் என்ற நபர் வேலை பார்த்து வருகிறார்..

சக்திவேல் மீது தாக்குதல்
நேற்று முன்தினம், அதாவது ஜூன் 16 சக்திவேல் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.. அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரையே பின்தொடர்ந்து வந்துள்ளது.. வீட்டிற்குள் சக்திவேல் சென்றதுமே அவரை கொடுமையாக தாக்கிவிட்டு, டேப் மூலமாக அவரது வாய், கை, கால்களை கட்டிப் போட்டது.
பிறகு வீட்டிற்குள் நுழைந்து தொழிலதிபர் இம்தியாஸையும் கட்டிப்போட்டது.. அவரது மனைவி சபிதாவிடம் கத்தியை காட்டி, பீரோவை திறக்க சொல்லி மிரட்டியிருக்கிறது.. இதனால் பயந்துபோன சபிதா, பீரோவை திறந்துவிட்டுள்ளார்.. உடனே அந்த பேரும் பீரோல் பணம், மற்றும் நகைகளை அள்ளி கொண்டிருந்தனர்..
சத்தம் போட்ட சபிதா
இதனிடையே சபிதா நைஸாக அங்கிருந்து வெளியேறி, வீட்டிற்கு வெளியே வந்து கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த கொள்ளையர்கள், கையிலிருந்த 2 காஸ்ட்லி செல்போன்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்..
அவர்களால் பீரோவிலிருந்த பணம், நகைகளை முழுவதுமாக கொள்ளையடிக்க முடியவில்லை என்பதுடன், அவர்கள் கையில் கொண்டுவந்திருந்த பொருட்களையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
சபிதாவின் குரலை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், சக்திவேல், இம்தியாஸை மீட்டனர். உடனடியாக இச்சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதிர்ந்த வாணியம்பாடி
இந்த புகாரின்பேரில் விரைந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார், உடனடியான விசாரணையை மேற்கொண்டனர்.. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை கொண்டும் ஆய்வு செய்தனர்.. ஆனால், அந்த கொள்ளையர்கள் யார் என்று தெரியவில்லை..
பட்டப்பகலில் தொழிலதிபர் வீட்டுக்குள்ளேயே நுழைந்து கட்டி வைத்து கொள்ளையடித்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை வாணியம்பாடியில் ஏற்படுத்தியது. போலீசாரும் தங்களுக்கு கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளை வைத்தே விசாரணையை விரிவுபடுத்தினர்.
திடீர் திருப்பம்
இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் எதிர்பாராத திருப்பமாக, ஆந்திராவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவின் திருமலா பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் பெயர் அருண்குமார்.. இவர்தான் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, தப்பிச்சென்ற 4 பேரையும் வாணியம்பாடி போலீசார் விரைந்து கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.. அதேபோல, தொழிலதிபருக்கும், போலீஸ்காரருக்கும் என்ன தொடர்பு? எதற்காக இந்த வீட்டை குறி வைத்து கொள்ளை நடந்தது? என்ற விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications