துரோகம் செய்த ஓபிஎஸ்.. இன்னும் கொஞ்சநாள் தான்.. புத்தாண்டில் எல்லாம் மாறும்.. சிவி சண்முகம் உறுதி
விழுப்புரம்: இன்னும் கொஞ்சம் நாள் தான். புத்தாண்டுக்குள் அதிமுகவில் உள்ள சலசலப்புகள் முடிவுக்கு வந்துவிடும் எனக்கூறிய மாநிலங்களவை எம்பி சிவி சண்முகம், ஓ பன்னீர் செல்வத்தை அவரது பெயர் குறிப்பிடாமல் துரோகி என கடுமையாக விமர்சனம் செய்தார். ர்.
விழுப்புரத்தில் அதிமுகவின் 51ம் ஆண்டு கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எம்பியாக உள்ள சிவி சண்முகம் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் முன்னாள் முதல்வரான ஓ பன்னீர் செல்வத்தின் பெயரை குறிப்பிடாமல் பல்வேறு விமர்சனங்களை செய்தார். இதுதொடர்பாக சிவி சண்முகம் பேசியதாவது:

போராட்டம் புதிது அல்ல
அதிமுக இயக்கம் பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு சோதனைகளை நாம் சந்தித்து உள்ளோம். இந்த சோதனைகளின்போது அதிமுக இருக்குமா? இருக்காதா? என்ற நிலைமை எல்லாம் வந்தது. 1996ல் அதிமுக முடிந்து போய்விட்டதாக கூறினார்கள். அதிமுகவுக்கு சமாதி கட்டிவிட்டதாக கூறினார்கள். ஆனால் அதையும் மீறி அதிமுகவை ஜெயலலிதாவை வெற்றி பெற செய்தார். சோதனைகளை தாங்கி தான் அதிமுக இயக்கம் வந்துள்ளது. இதனால் சோதனை, போராட்டம் என்பது நமக்கு ஒன்றும் புதிது அல்ல.

அவர் பெயரை சொன்னால் கூட...
அதிமுக ஆரம்பித்ததே போராட்டத்தில் தான். பொதுமக்கள் வீதிகளில் இறங்கி கட்சி ஆரம்பிக்க கூறிய நிலையில் எம்ஜிஆர் கட்சியை துவங்கினார். தொண்டர்களால் துவங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. கட்சியில் தற்போது சில சலசலப்பு உள்ளது. நேற்று வரை கட்சியில் இருந்து கொண்டு பெயர், சொத்து, சுகம் அனுபவிச்சிவிட்டு உச்சப்பட்சமான முதல்வர் பதவி, கட்சியின் தலைமை பதவி என அனைத்தையும் ஆண்டு, அனுபவித்த அவர்(ஓபிஎஸ்) பெயரை சொன்னால் கூட நமக்கு.. அவர் தான் இந்த இயக்கத்தை கூண்டோடு அழிக்க நினைக்கிறார்.

துரோகம் செய்பவர்கள் அனாதை
அதிமுக என்பது யாரை எதிர்த்து துவங்கப்பட்டது. 1972ல் கருணாநிதியை எதிர்த்து அதிமுக துவங்கப்பட்டது. ஜெயலலிதா இன்னும் கூட சில ஆண்டுகள் நம்முடன் வாழ்ந்து இருப்பார். ஜெயலலிதா இன்று நம்முடன் இல்லாமல் இருப்பதற்கு காரணம் திமுக. இத்தகைய திமுக, ஸ்டாலினுடன் அவர் (ஓபிஎஸ்) நேரடி உறவு வைத்து கொண்டுள்ளார். அதிமுகவின் வேட்டி கட்டிக்கொண்டு திமுகவின் இணைந்து செயல்பட்டு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு தானும், தன் குடும்பமும் மட்டும் பிழைக்க வேண்டும் என அவர் செயல்படுகிறார். அதிமுகவின் இயக்கத்தை அழிக்க அவர் கிளம்பியுள்ளார். அவரை போன்று பலபேரை அதிமுக கண்டுள்ளது. அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் கடைசியில் அனாதையாக தான் போவார்கள்.

புத்தாண்டில் புத்துணர்ச்சி
அதிமுக என்பது கருணாநிதியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தான் துவங்கப்பட்டது. இதனால் திமுக வீழ்த்தப்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா காத்த அதிமுக சிறுசிறு சலசலப்புக்கு அஞ்சாது. இதுபற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதிமுக என்பது ஆலமரம். இதனால் யாரும் பயப்பட வேண்டும். இதெல்லாம் கொஞ்சம் நாள் தான். விரைவில் சரியாகிவிடும். அடுத்த புத்தாண்டில் அதிமுக புத்துணர்ச்சியாக செயல்படும்.












Click it and Unblock the Notifications