நண்பன் உயிரிழப்புக்கு காரணம் ஆகிவிட்டேனே..குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்த வாலிபர்..செஞ்சியில் சோகம்
விழுப்புரம்: பைக்கில் ஒன்றாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் நண்பன் உயிரிழந்து விட்டதால் பெரும் சோகம் அடைந்த வாலிபர், குற்ற உணர்ச்சியில் தனது உயிரையும் மாய்த்துக்கொண்டது செஞ்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி அருகே உள்ள எம்.ஜி.ஆரில் நகரில் வசித்து வந்தவர் சீனிவாசன். அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு சீனிவாசன் படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பிரபு. இவர் அங்குள்ள தனியார் கொரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

உயிருக்கு உயிரான நண்பர்கள்
உயிருக்கு உயிரான நண்பர்களாக வலம் வந்த சீனிவாசனும் பிரபுவும் எப்போதும் ஒன்றாகத்தான் சுற்றுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் பார்டியில் பங்கேற்க செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக சீனிவாசன் தனது பைக்கை எடுத்து வந்துள்ளார். பைக்கை பிரபு ஓட்ட சீனிவாசன் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருக்கிறார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற போது..
அப்போது சாலை வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலை தடுமாறி சாலையோரத்தில் பாய்ந்தது. இதில் பின்புறம் அமர்ந்து இருந்த சீனிவாசன், சாலையோரம் இருந்த பெயர் பலகை மீது விழுந்து படுகாயம் அடைந்தார். பைக்குடன் சிறிது தூரம் இழுத்த்செல்லப்பட்ட பிரபுவும் படுகாயம் அடைந்தார். விபத்தில் படுகாயத்துடன் வாலிபர்கள் இருவரும் உயிருக்கு போராடியுள்ளனர். இதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்தில் நண்பர் பலி
செஞ்சி அரசு மருத்துவமனையில் சீனிவாசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனால், சீனிவாசனின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதது மருத்துவமனையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த பிரபு, தனது நண்பனின் அகால மரணத்திற்கும் தாமே காரணம் ஆகிவிட்டோம் என்று குற்ற உணர்ச்சியில் தவித்து வந்துள்ளார்.

தற்கொலைக்கு முயற்சி
கடும் மன உளைச்சலில் புலம்பிக் கொண்டு இருந்த பிரபு, அங்கு இருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரபுவின் நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். பிரபுவுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்தனர்.

இதற்கு காரணம் நான் தான்
இதன்படி, புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபு சிகிச்சைக்கு பிறகு ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். இருந்தாலும் , விபத்தில் தனது நண்பனை பறிகொடுத்துவிட்டேன் என்றும் இதற்கு காரணம் நான் தான் என்றும் பிரபு தொடர்ந்து குற்ற உணர்ச்சியில் தவித்து வந்து இருக்கிறார். நண்பர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரபு, தனது உயிர் நண்பன் சீனிவாசன் உயிரிழந்த துக்கம் தாளாமல் தவித்து இருந்து இருக்கிறார்.

தூக்கு போட்டு சாவு
கடும் மன உளைச்சலில் இருந்த பிரபு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அன்று இரவே வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நண்பன் விபத்தில் உயிரிழப்பதற்கு காரணம் ஆகிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் தனது உயிரையும் பிரபு மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications