தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் ஜைனுதீன் அறிவித்துள்ளார். 'ஜனநாயகன்' படத்தின் லீக் ஆன காட்சிகளில் இஸ்லாமியர்களை தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, தங்கள் ஆதரவை விலக்கியுள்ளது முஸ்லிம் மக்கள் கழகம்.
விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் 'ஜனநாயகன்' இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படம் வெளியாகவில்லை.

குறிப்பிட்ட சில காரணங்களால் அந்த படம் திரையிடப்படுவதில் தாமதம் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் ஏப்ரல் 9 ஆம் அந்த படத்தின் குறிப்பிட்ட சில நிமிட காட்சிகள் இணையத்தில் கசிந்து, ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து 10 ஆம் தேதி முழு படமும் இணையத்தில் வெளியானது.
ஏற்கனவே திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், தற்போது அந்த படத்தின் காட்சிகள் வெளியாகி மேலும் சில சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது. இதனிடையே, ஜனநாயகன் படத்தில் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக புதிய சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.
ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாகவும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளை போல சித்தரிப்பதாகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெடிகுண்டு வைக்கும் கதாபாத்திரத்திற்கு இஸ்லாமிய தோற்றமும், அந்த நபரை 'பாய்' என அழைக்கும் வசனமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் ச.சு. ஜைனுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், "ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் முஸ்லிம்களுக்கும், இந்து சகோதரர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது இந்தியா மற்றும் உலக அளவில் வாழும் இஸ்லாமியர்களின் உணர்வுகளைக் கடுமையாக பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகி எஸ்.சக்திவேல், நேரடியாக சந்தித்து ஆதரவு கோரியதன் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் கழகம், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது.
தற்போதைய சூழலில் அந்த ஆதரவு திரும்ப பெறப்படுகிறது. முஸ்லிம் மக்கள் கழக நிர்வாகிகளும், இஸ்லாமியர்களும் விஜய் தலைமையிலான கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம். விஜய்க்கு ஆதரவாக செல்லும் வாக்குகள் தேர்தல் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
பாஜக, அதிமுக ஆட்சிக்கு வந்தால் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற அச்சமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுதல், ஹிஜாப் அணிவதற்கு கல்வி நிறுவனங்களில் தடை, மத அடிப்படையிலான பதற்றங்கள் அதிகரிப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிப்பு, வழிபாட்டு தலங்கள் குறி வைக்கப்படுதல், உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுகள் என பல்வேறு கவலைகள் முன் வைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications