அங்கன்வாடி மையம் திறப்பு விழா! உருது மொழியில் பேசி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய அமைச்சர் பொன்முடி!
விழுப்புரம்: விழுப்புரத்தில் அங்கன்வாடி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்றிருந்த அமைச்சர் பொன்முடி, உருது மொழியில் பேசி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கியுள்ளார்.
மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது. இந்நிலையில், உருது மொழியில் அமைச்சர் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் எடப்பாளையம் கிராமத்தில் ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், வனம் மற்றும் கதர் துறை அமைச்சருமான பொன்முடி, நேற்று திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் அங்கிருந்த இஸ்லாமிய குழந்தைகளிடம் உருது மொழியில் பேசி, அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவருடன் கூடுதல் ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். அதன் பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்சியில் கலந்து கொண்டு இஸ்லாமியர்களுடன் நோன்பு கஞ்சி குடித்தார். புனித ஹச் பயணம் மேற்கொள்ளும் மக்கள் சென்னையில் இருந்தே விமான மூலம் செல்கின்றனர். சென்னையில் அவர்களுக்காக ரூ.65 கோடி மதிப்பீட்டில் தங்குமிடம் அமைப்பதற்கான கட்டத்தினை நேற்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் மும்மொழி குறித்து நீண்ட காலமாக விவாதங்கள் நீடித்து வருகின்றன. இங்கு இருமொழிக்கொள்கை அமலில் இருக்கிறது. தமிழகத்திற்கு ரூ.2100 கோடி அளவுக்கான கல்வி நிதி மத்திய அரசு தரப்பிலிருந்து பெண்டிங் இருக்கிறது.
இதனை விடுவிக்க வேண்டும் எனில் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் புதிய கல்விக்கொள்கை மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது என கல்வியாளர்கள் விமர்சித்துள்ளர். எனவே மும்மொழிக்கொள்கை குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. இந்த நேரத்தில்தான் பொன்முடி இஸ்லாமிய குழந்தைகளிடம் உருது மொழியில் பேசியிது கவனம் பெற்றிருக்கிறது.

மும்மொழிக்கொள்கை வேண்டாம் என்று சொல்கிறீர்கள். ஆனால், அமைச்சர் மட்டும் உருது மொழியில் பேசலாமா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இஸ்லாமிய குழந்தைகளிடம்தானே அவர் உருது மொழியில் பேசினார். இதில் என்ன பிரச்சனை? என மற்றொரு தரப்பினரும் பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே? உங்கள் கருத்துக்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்.












Click it and Unblock the Notifications