நான் பாமகவை தாண்டி வளர்ந்துட்டேன்.. மார்க் போட நான் என்ன ‘ஐயா’வா? தடாலடியாகப் பேசிய தவாக வேல்முருகன்
விழுப்புரம்: தான் பாமகவை தாண்டி வளர்ந்து விட்டேன் என கூறியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான பண்ருட்டி வேல்முருகன். மேலும், மக்களுக்கு குரல் கொடுப்பதற்கும், திமுக கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரத்தில் அகில உலக புலம்பெயர்ந்தோர் தினம் கொண்டாடப்பட்டது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கிராமங்களிலிருந்து வெளிநாடுகளுக்குப் பல்வேறு வேலைகளுக்குச் செல்லும் 800-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் மற்றும் தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர் நலவாரியத்தின் தலைவர் பொன்குமார் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்கான கருத்துகளையும் பதிவு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவாக வேல்முருகன்,” புதுக்கோட்டையில் கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடிய இஸ்லாமிய இளைஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார். கனிம வள கொள்ளையர்கள் லாரி ஏற்றி கொலை செய்து உள்ளனர். கொலைக்கு முக்கியமான காரணமாக இருக்கும் நபரை மாபியா கும்பலை கண்டுபிடித்து விரைவாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உடனடி தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் அனைத்து இடங்களிலும் கஞ்சா போதை உள்ளிட்ட போதை வஸ்துகள் கிடைக்கிறது. ஆண் பெண் வித்தியாசம் இன்றி இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகி தான் என்ன செய்கின்றோம் என்பதே தெரியாமலேயே நினைவிழந்து அவர்கள் பல தவறுகளை செய்யக்கூடிய காலகட்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர். தொடர் கொலைகள் நடைபெற்று வருவதற்கு அடிப்படை காரணம் போதை வஸ்துக்கள். காவல்துறை அதிகாரிகள் இதையெல்லாம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
பாலியல் குற்றம் மணல் குற்றம் உள்ளிட்ட எல்லா குற்றங்களுக்கும் அடிப்படை காரணம் மனிதன் சுயநினைவை இழக்க கூடியதற்கு கஞ்சா, போதை வஸ்துகள் மற்றும் மதுபானம் தான் காரணம். இதை அனைத்தையும் தமிழக முதலமைச்சர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரும்பு கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெரியார் பேச்சை குறித்து கவனம் செலுத்துபவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தினால் நாட்டுக்கும் நல்லது நாட்டு மக்களுக்கும் நல்லது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு கண்டிப்பாக கடுமையான தண்டனை கிடைக்கும். நிதி மேலாண்மை மேம்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கருத்தினை கூறியுள்ளார். அது ஏற்புடையது. அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் தான் நிதியமைச்சர். அதனை ஏற்றுக் கொள்வார் என கருதுகிறேன்.
சபாநாயகரின் பேச்சு நடைமுறை வழக்கத்தில் அவர் தவறுதலாக பேசிவிட்டார். அதில் எந்த தவறும் இல்லை. கொலை குற்றவாளிக்கு நிகரான பாலியல் குற்றவாளி ஞானசேகரன் இவர் மீது 20 வழக்குகள் உள்ளது. அவரை தம்பி என்று அழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அழைக்கவில்லை. இது தவறுதலாக நடந்திருக்கிறது. டங் ஸ்லிப்பில் இது நடந்துள்ளது.
பரந்தூருக்காகவும், அதானி துறைமுகத்திற்கு எதிராகவும், அனல் மின் நிலையத்திற்கு எதிராகவும் தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசி வருபவன் இந்த வேல்முருகன். மக்கள் எதிர்க்கின்ற எந்த திட்டங்கள் ஆக இருந்தாலும், என்எல்சி ஆக இருந்தாலும் சரி, பரந்தூர் ஆக இருந்தாலும் சரி தமிழக அரசு அனுமதிக்க கூடாது, இதனை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன். சட்டமன்றத்திலும் ஆணித்தரமாக இதனை நான் பதிவு செய்துள்ளேன். அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்கக் கூடாது என்பதுதான் எங்களது கட்சியின் கொள்கை. பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். தமிழகத்தில் நடந்து வரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இதற்கெல்லாம் ஒரு முடிவு ஏற்படும் படிப்படியாக மதுவினை குறைத்து வேறு வழிகளில் வருமானத்தை பெருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெற்று வரும் நான்கு ஆண்டு ஆட்சிக்கான மார்க் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ’நான் மார்க் போட ஐயா இல்லை’ என கூறினர். பாமக குறித்த கேள்விக்கு ’நான் பாமகவைத் தாண்டி வளர்ந்து விட்டேன்’ என பதில் அளித்துவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications