பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கு.. திடீரென என்ட்ரியான அதிமுக.. இன்று மீண்டும் விசாரணை
விழுப்புரம்: விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம் மண் குவாரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடந்தது. அப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடிதான் கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனித்து வந்தார். பொன்முடி கனிம வளத்துறையில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அமைச்சர் க.பொன்முடி, அவரது மகன், பொன்.கௌதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்து விட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 67 பேர் சேர்க்கப்பட்டு, செப்டம்பர் 7-ஆம் தேதி வரை 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பிறழ் சாட்சியமளித்தனர்.
கடந்த மாதம் நடந்த வழக்கு விசாரணையின் போது க.பொன்முடி, பொன்.கெளதம சிகாமணி, தவிர, மற்ற 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அரசுத் தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. அமைச்சர், எம்.பி. ஆகியோர் ஆஜராகாத காரணத்தை குறிப்பிட்டு திமுக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியமாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் தன்னையும் அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி மனுதாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையையடுத்து அக்டோபர்3-ஆம் தேதி அவரது மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் முதல்வாரம் நடந்தது.
அப்போது, க.பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், டி.ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபணை தெரிவித்ததுடன், மனுதாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை வைத்தார்கள். இதை ஏற்ற முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூர்ணிமா, வழக்கின் விசாரணையை அக்டோபர் 17-ஆம் தேதியான இன்றைக்கு விசரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. டி.ஜெயக்குமாா் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனுவினை பொன்முடி தரப்பு இன்று அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications