யார் இந்த அன்னியூர் சிவா.. திமுகவில் 35 வருட அரசியல்வாதி.. முதல் முறையாக கிடைத்த வாய்ப்பிலே சிக்சர்!
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் அடிப்படை தொண்டனாக 37 வருடம் முன்பு அரசியலை ஆரம்பித்த அன்னியூர் சிவா உள்ளாட்சி தேர்தல் எந்த தேர்தலிலும் இதுவரை போட்டியிடாமல் நேரடியாக எம்எல்ஏ தேர்தலில் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த நா.புகழேந்தி, உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது மேடையிலேயே மயங்கி விழுந்தார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகழேந்தி, சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6-ஆம் தேதி காலமானார்.

இதனால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கவில்லை. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களுக்கு பின்னரே தேர்தல் குறித்த அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டது ஜூலை 10-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14 அன்று துவங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை பாமகவிற்கு செல்வாக்கு அதிகம் உள்ள பகுதி என்பதுடன், வன்னியர்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால் வன்னியர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்றும், அதேநேரம் அதிமுக, பாமகவிற்கு சவால் தரும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்த ஸ்டாலின், கள நிலவரத்தை கேட்டிருக்கிறார்.
அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக, அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அன்னியூர் சிவா கடந்த 1971-ம் ஆண்டு, ஏப்ரல் 3ம் தேதி பிறந்தர், பி.ஏ., இளங்கலை பட்டம் படித்த இவருக்கு வனிதா என்ற மனைவியும், அர்ஷிதா சுடர் என்ற மகளும், திரிலோக் ஹரி என்ற மகனும் இருக்கிறார்கள்.
அன்னியூர் சிவா. கடந்த 1987-ம் ஆண்டு திமுகவில் இணைந்து, 1988ல் தபால் நிலையங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றிருக்கிறார். அதன்பின்னர் 1989ல் இளைஞர் அணி துணை அமைப்பாளராக உயர்ந்துள்ளார். அடுத்தாக கிட்டடத்தட்ட 7 வருடங்கள் கழித்து, 1996 ஆண்டு அன்னியூர் கூட்டுறவு வங்கித் தலைவரானார்.
தொடர்ந்து, 2002ம் ஆண்டு ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்குழு உறுப்பினராக அன்னியூர் சிவா மாறினார். 2020ம் ஆண்டு மாநில விவசாய அணி துணை அமைப்பாளராக அவருக்கு பதவி கொடுக்கப்பட்டது. இறுதியாக விவசாய தொழிலாளர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். அன்னியூர் சிவா இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை.. உள்ளாட்சி தேர்தலில் கூட போட்டியிட்டு கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் என எந்த பதவியும் அன்னியூர் சிவா வகித்தது இல்லை.. மக்களால் தேர்வு செய்யப்படும் எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், நேரடியாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அன்னியூர் சிவா திமுகவில் அடிப்படைத் தொண்டனாக இருந்து 35 வருடங்களுக்கு எம்எல்ஏ வேட்பாளர் ஆனார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தீவிர தொண்டரான இவர், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் முழு ஆதரவு இருந்ததால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கட்சி இளைஞர்களிடம் சகஜாமாக பழகக்கூடிய அன்னியூர் சிவா, திமுக சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் கண்டிப்பாக கலந்து கொள்வாராம்.
பல வருடங்களாக திமுகவில் இருந்து வரும் அன்னியூர் சிவா முதல்முறையாக திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாமக வேட்பாளர் சி அன்புமணியைவிட 67000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிமுக இருப்பதால் தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கிறார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில் , பாமக போட்டியிட்டது. பாமகவுக்கு அதிமுகவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதிமுகவின் புறக்கணிப்பிற்கு எந்த பலனும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications