தீபாவளி.. ஆதரவற்ற 211 குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுத்த திமுக எம்எல்ஏ.. சபாஷ்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், ஆதரவற்ற 211 குழந்தைகளுக்கு தீபாவாளி பண்டிகையை ஒட்டி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக இவ்வாறு புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வரும் இவர், தனது சட்டமன்ற உறுப்பினர் மாத ஊதியத்தில் இருந்து இதற்கு செலவு செய்திருக்கிறார்.
தற்போது கூட மூன்று மாத ஊதியத்தை மொத்தமாக சேர்த்து வைத்த அவர், 211 குழந்தைகளை ஜவுளிகடைக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் புத்தாடைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.

ராஜபாளையம் தொகுதி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். 2வது முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் கடந்த 6 ஆண்டுகளாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவாளி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்தாண்டு ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் 3 ஆதரவற்றோர் காப்பகத்தை சேர்ந்த 211 குழந்தைகளை தன்னுடன் ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்ற அவர் அவர்கள் விரும்பிய புத்தாடைகளை வாங்கி தந்துள்ளார்.

குழந்தைகள் மகிழ்ச்சி
குழந்தைகள் எந்த ஆடை பிடித்திருக்கிறது என கைக்காட்டியதோ அதனை விலையை பற்றி கவலைப்படாமல் வாங்கிக் கொடுத்துள்ளார் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆதரவற்ற 211 குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கியதற்காக துணிக்கடைக்கு மட்டும் மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பில் கட்டியிருக்கிறார் இவர். பட்டுப்பாவாடை, குர்தா என விதவிதமாக புத்தாடைகள் வாங்கிய மகிழ்ச்சியில் குழந்தைகளின் முகம் புன்னகையில் பூரித்துப் போனது.

சொந்தப் பிள்ளைகள்
ஆதரவற்ற காப்பகத்தை சேர்ந்த பிள்ளைகளை தனது சொந்தப் பிள்ளைகள் போல் கருதி அவ்வப்போது அவர்களுக்கு தேவையான உதவிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தீபாவாளி புத்தாடைகள் எடுத்துக் கொடுத்த போது குழந்தைகளுக்கு ஆடையின் அளவு சரியாக இருக்குமா என்பது வரை அருகில் இருந்து அவர் கடை ஊழியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். கட்சியினரை கூட்டமாக அழைத்துச் சென்று விளம்பரம் தேடாமல் சத்தமின்றி துணி எடுத்துக் கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

ஆனந்த தீபாவளி
ஆதரவற்ற குழந்தைகளும் ஆனந்தமாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆடைகள் வாங்கித் தந்த திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications