மதம், இனத்தால் நாடு பிரியக்கூடாது.. பிரிவினையை முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார்.. சேகர்பாபு உறுதி
விருதுநகர்: மதம், இனத்தால் நாடு பிரியக்கூடாது. தமிழகம் இனம், மொழி, மதம் ஆகியவற்றால் மக்கள் பிரிக்கப்படுவதை தமிழக முதல்வர் அனுமதிப்பதில்லை. அனைவரும் மனிதனாக இருக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.50 கோடி மதிப்பீட்டில்
நடைபெற உள்ள வளர்ச்சி திட்ட பணிகளின் பெருந்திட்ட வரைவு குறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
இப்பெரும் திட்ட வரைவில் இருக்கன்குடி கோவிலுக்கு பிரம்மாண்டமான மூன்று நுழைவு வாயில்கள், கோவிலை சுற்றி பிரகாரங்களில் கருங்கல் தளம்எல்லைப் பகுதிகளை சுற்று சுற்றுச்சுவர் அமைத்தல் ஆற்றைக் கடக்க உயர்மட்ட மேம்பாலம் 20 பெரிய விருந்து மண்டபங்கள் பக்தர்கள் மற்றும் கோவில் சுற்றி வளாகம் முழுவதும் தெருவிளக்கு ஆகிய பணிகள் நடைபெற உள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட ஆய்வு இன்று நடைபெற்றது. அதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
கோவை கார் வெடிப்பு! பயங்கரவாதம் தலைதூக்கினாலே.. முதல்வர் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை- சேகர்பாபு

கும்பாபிஷேகம்
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்தவுடன் கும்பாபிஷேகம் நடத்தப்படும். வருகின்ற வைகாசி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும். அறங்காவலர் உடன் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை வடிகால் பணி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையை பொருத்தவரையில் 1200 கிலோமீட்டர் அளவுக்கு ரூ.2500 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு பெரிய பணி ஓராண்டுக்குள் 90 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்த வரலாறு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தான் நடந்துள்ளது. இன்னும் பத்து சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டால் சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் மழைநீர் வடிகாலில் சென்றுவிடும்.

போர்க்கால அடிப்படையில்..
மேலும் சென்னையில் இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள், மரங்கள் அகற்றும் பணியும், சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. மழை வந்தால் நீர் தேங்கும் 600 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. அதிகமாக தண்ணீர் தேங்கும் 160 இடங்கள் கண்டறியப்பட்டு மின் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை போர்க்கால அடிப்படையில் எதிர் கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. பருவமழைக்கு முன்பாக சென்னையை தயார் நிலையில் தமிழக முதல்வர் வைத்து உள்ளார்.

இனம், மதத்தால் பிரிக்கப்படும்
தமிழ்நாட்டில் இனம், மொழி, மதம் ஆகியவற்றால் மக்கள் பிரிக்கப்படுவதை தமிழக முதல்வர் அனுமதிப்பதில்லை. நாம் அனைவரும் மனிதர்கள் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மதம், இனத்தால் நாடு, பிரிய கூடாது அனைவரும் மனிதனாக இருக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார்.

தீவிரவாதத்துக்கு அனுமதியில்லை
தமிழக முதலமைச்சர் தீவிரவாதத்தை எள்ளளவும், அனுமதிக்க மாட்டார். தீவிரவாதத்தை எந்த பகுதியில், எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு முதலமைச்சர் தயாராக உள்ளார். தமிழக முதல்வரை பொறுத்தவரை தமிழகம் புண்ணிய பூமியாக, அமைதிப் பூங்காவாக இருப்பதால் இங்கு தீவிரவாதத்திற்கு அனுமதி இல்லை என்ற நிலைப்பாட்டோடு தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்'' என்றார்.