பாலே இங்க தேறல.. பாயாசம் கேக்குதா.. விடுமுறை கேட்ட மாணவனுக்கு விருதுநகர் கலெக்டர் கலகல பதில்.. அடடா!
விருதுநகர்: விருதுநகர் பள்ளிகளுக்கு விடுப்பு விடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய கோரியவரிடம் கலெக்டர் மேகநாத ரெட்டி, ‛‛பாலே இங்க தேறல.. பாயாசம் கேக்குதா'' என தமிழ் பாடல் வரிகளை குறிப்பிட்டு ‛தக்லைப்' போன்று பதிலளித்தது தற்போது இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டங்களில் பெய்யும் கனமழை அல்லது கனமழைக்கான எச்சரிக்கையின் அடிப்படையில் நிலைமையை பார்த்து மாவட்ட வாரியாக கலெக்டர்கள் விடுமுறையை அறிவித்து வருகின்றனர்.
உடைந்த உப்பனாறு கரை..சூரக்காடு கிராமத்தை சூழ்ந்த வெள்ளம்..உயிர் மட்டுமே மிச்சம் என மக்கள் தவிப்பு

தொடர் கனமழை
இந்நிலையில் தான் நேற்று இரவு முதல் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது தென்மேற்கு வங்க கடல், வட இலங்கை பகுதிகளில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு மழை பெய்து வருகிறது.

30 மாவட்டங்களுக்கு விடுமுறை
இந்த மழையின் காரணமாக இன்று தமிழ்நாட்டில் 30 மாவட்ட பள்ளி -கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 12ம் தேதியான(சனிக்கிழமை) இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருச்சி, மயிலாடுதுறை, தேனி, திருப்பத்தூர், கோயம்புத்தூர், திருவாரூர், கன்னியாகுமரி, அரியலூர், நீலகிரி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, சிவகங்கை, மதுரை, கிருஷ்ணகிரி, மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

தெற்கு மாவட்டங்களில் நோ லீவ்
இருப்பினும் தெற்கு மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் கூட இந்த 4 மாவட்டங்களுக்கு விடுமுறை எதுவும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மழையை எதிர்பார்த்து தினமும் காலையில் தொலைக்காட்சி சேனல்கள் முன்பு அமர்ந்து இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு தற்போது வரை ஏமாற்றமே கிடைத்து வருகிறது.

விருதுநகர் கலெக்டரிடம் கேள்வி?
இதில் சிலர் ஒருபடி மேலே சென்று சம்பந்தப்பட்ட கலெக்டரிடமே கேட்கின்றனர். இது சமீப காலமாக நடந்து வரும் நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.ஹரீஷ் விஜே என்ற ட்விட்டர் பயனாளரின் பக்கத்தில் ஒரு பதிவு செய்யப்பட்டது.அதில், தொலைக்காட்சி சேனல் ஒன்றில் விருதுநகர் நாளை விடுமுறை என ப்ரேக்கிங் செய்தி ஓடுவது போல் இருந்தது. இதனை போட்டா எடுத்து அந்த படத்தை ட்விட்டரில் பதிவிட்ட அவர், ‛‛சார்.. என்ன சார் இது.. கன்பார்ம் பண்ணுங்க சார்'' என விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டியின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து கேள்வி கேட்டு இருந்தார்.

கலெக்டர் ‛தக்லைப்’ ரிப்ளை
இதற்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, ‛‛பாலே இங்க தேறல பாயாசம் கேக்குதா!!! மழை இல்லை. பள்ளிக்கூடம் உண்டு. அது தவறான செய்தி. சீக்கிரமாக தூங்கிவிட்டு காலையில் பள்ளி செல்ல எழுந்திருக்க வேண்டும். குட்நைட்'' என பதிலளித்தார். இவர் இதற்கு முன்பும் கூட மாணவர்களின் விடுமுறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அதிக பகிர்வு
இருப்பினும் தற்போது கனமழையை காரணம் காட்டி விருதுநகர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய கோரியவரிடம் ‛பாலே இங்க தேறல.. பாயாசம் கேக்குதா'' என தமிழ் சினிமாவின் பாடல் வரிகளை குறிப்பிட்டு கலெக்டர் மேகநாத ரெட்டி பதிலளித்தது தற்போது இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனை இணையதளத்தில் பார்க்கும் 90ஸ் கிட்ஸ்களோ, 2K கிட்ஸ்கள் நேரடியாக கலெக்டரிடமே விடுமுறை தொடர்பாக பேசுகின்றனர். ஆனால் எங்கள் காலத்தில் இந்த வாய்ப்பு இல்லை. இப்போது காலம் மாறிபோய்விட்டது என கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ, 2K கிட்ஸ்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஆனாலும் கலெக்டர் மேகநாத ரெட்டி தமிழ் பாடலை குறிப்பிட்டு அவர்களுக்கு உரிய பதிலோடு அட்வைஸ் வழங்கி அசத்துகிறார் என கூறி வருகின்றனர்.