திமுக வேட்பாளர் திடீர் மரணம்.. விருதுநகரில் ஒரு வார்டில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் ரத்து
விருதுநகர்: விருதுநகரில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் உயிரிழந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் பிப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்படி விருதுநகரில் உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சி மொத்தம் 18 வார்டுகளை கொண்டது. இங்கு மொத்தம் 14,348 வாக்காளர்கள் உள்ளன.
இதனிடையே வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த கனி (எ) முத்தையா, வத்திராயிருப்பு பேரூராட்சியில் 2ஆம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

54 வயதான முத்தையா நேற்று இரவு ஒரு மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் உயிரிழந்த காரணத்தால், விருதுநகர் வத்திராயிருப்பு பேரூராட்சியில் 2ஆம் வார்டில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், வேட்பாளர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications