விருதுநகரில் வீடு அடமானக் கடன் கேட்ட பிரபாகரன்..தலைசுற்ற வைத்த சொத்து மதிப்பு.. பதிவுத்துறை ட்விஸ்ட்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். நிதி நிறுவனத்தில் அடமான கடன் கேட்டபோது அவரது சொத்தின் மதிப்பு பூஜ்ஜியமாக இருந்துள்ளது. இது பற்றி விசாரித்த போது, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடங்கள் அனைத்தும் பூஜ்ஜியம் மதிப்பு ஆக்கப்பட்டதாக சார் பதிவாளர் அலுவலகத்தில் கூறியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் உள்பட 15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீடு அடமானக்கடன் வாங்குவதற்கு இப்போது பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் வழிகாட்டி மதிப்பு சரியாக இருந்தால் தான் கடன் வாங்க முடியும். வீடு அடமானக் கடன் வழிகாட்டி மதிப்பு பூஜ்ஜியமாக இருந்தால், கடன் வாங்கவே முடியாது.

வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை வீடு வாங்கும்போதே மதிப்பு நிர்ணயம் செய்யப்படும். அதேநேரம் பூஜியம் மதிப்புடைய நிலங்களை பத்திரப்பதிவும் செய்ய முடியாது.நிலத்தை வைத்து அல்லது வீட்டை வைத்து கடனும் வாங்க முடியாது. இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும். இந்த நடைமுறையால் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. இதில் பிரபாகரன் என்பவர் வீடு வாங்கி வசித்து வருகிறார். இவர் கடந்த 31.3.2023-ந் தேதியன்று நிதி நிறுவனத்தில் அடமான கடன் கேட்டுள்ளார். அப்போது வங்கி நிர்வாகம் உங்கள் சொத்தின் மதிப்பு பூஜ்ஜியமாக ஆக்கப்பட்டுள்ளது.
எனவே கடன் தர முடியாது என கூறிவிட்டதாம். இதுகுறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தார். அப்போது வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடங்கள் அனைத்தும் பூஜ்ஜியம் மதிப்பு ஆக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
இதனால் பிரபாகரன், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழக அரசுக்கு சொந்தமான வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி குடியிருக்கும் என் வீட்டையும், நிலத்தையும், பூஜ்ஜிய மதிப்பாக மாற்றியதை ரத்து செய்து, மீண்டும் மார்க்கெட் மதிப்பாக்க வேண்டும். எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இந்த நிலத்தை பூஜ்ஜிய மதிப்பு ஆக்கிய பத்திரப்பதிவு துறை தலைவர், மாவட்ட பதிவாளர், சார்-பதிவாளர் உள்பட 7 பேர் நஷ்டஈடு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்..
ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். அப்போது பிரபாகரனின் நிலத்தை பூஜ்ஜிய மதிப்பில் இருந்து மார்க்கெட் மதிப்புக்கு மாற்றித்தர வேண்டும் என்று உத்தரவிட்டனர். மனுதாரருக்கு எந்த ஒரு முன்னறிவிப்பு கொடுக்காமல் பூஜ்ஜியம் மதிப்பாக்கிய பத்திரப்பதிவுத்துறை தலைவர், மாவட்ட பதிவாளர், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் ஆகியோர் சோ்ந்து நஷ்டஈடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் சேர்த்து ரூ.15 ஆயிரத்தை அபராதமாக பிரபாகரனுக்கு தர வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications