சிவகாசியில் நிகழ்ந்தது ஆணவக்கொலை அல்ல.. விருதுநகர் எஸ்.பி பரபர விளக்கம்!
விருதுநகர்: சிவகாசியில் நிகழ்ந்தது ஆணவக்கொலை அல்ல அன்றும், காதல் திருமணம் செய்ததால் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர் கார்த்திக் பாண்டியனும், பெண்ணின் குடும்பத்தாரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறை எஸ்.பி பெரோஸ்கான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் கார்த்திக் பாண்டியன் (27). இவர் சிவகாசியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும், சிவகாசியை சேர்ந்த பொன்னையா என்பவரது மகள் நந்தினியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு அய்யம்பட்டியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சிவகாசி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் தனது மனைவி நந்தினியை அழைத்து வருவதற்காக கார்த்திக் பாண்டியன் நேற்று இரவு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், சூப்பர் மார்க்கெட் வாசலிலேயே கார்த்திக் பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக் பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். கார்த்திக் பாண்டியை, அவரது மனைவி நந்தினியின் அண்ணன்களான பாலமுருகன், தனபாலன் மற்றும் அவர்களின் நண்பரான சிவா ஆகிய மூவர் தான் படுகொலை செய்ததாக கூறப்பட்டது.
காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலன் ஆகிய இருவரும், அவர்களது நண்பர் சிவா ஆகிய மூவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவகாசியில் நிகழ்ந்தது ஆணவக்கொலை அல்ல என விருதுநகர் எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார். சிவகாசி அருகே காதல் திருமணம் செய்ததால் கொல்லப்பட்டவரும், பெண்ணின் குடும்பத்தாரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், அய்யம்பட்டி கிராமம், மாரி முத்து என்பவரின் மகன் கார்த்திக் பாண்டியன் (27) என்பவரும் மகாத்மா காந்தி நகரில் வசித்து வரும் பொன்னையா என்பவரின் மகள் நந்தினி (22) என்பவரும் காதல் திருமணம் செய்து அய்யம்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.
இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலமுருகன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் நேற்று (ஜுலை 24) லெட்சுமி நகர், கண்ணன் சூப்பர் மார்க்கெட் அருகில் நந்தினி வேலை பார்க்கும் கடை அருகில் வைத்து கார்த்திக் பாண்டியனை வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை ஆணவக்கொலை என்று தவறாக சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இது ஆணவக்கொலை அல்ல. இறந்தவரும் அவர் காதல் திருமணம் செய்த பெண்ணும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் சமீபத்தில் அவர்களது மற்றொரு சகோதரியும் காதல் திருமணம் செய்துள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த அவரின் சகோதரர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது. எனவே தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications