டிரம்ப்பால ஒரே ஒரு நன்மையப்பா.. சரியும் கச்சா எண்ணெய் விலை! பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே திடீரென கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகும் கூட இதன் விலை குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம்.. பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த ரெசிப்ரோக்கல் வரி அறிவிப்பால் சர்வதேச அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மற்றொருபுறம் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவு
டிரம்பின் வரி அறிவிப்பு சர்வதேச வர்த்தக போரை உருவாக்கலாம். அதுபோல வர்த்தக போர் உருவானால் வணிகம் பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் தேவை குறையும். இதன் காரணமாகவே கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. டிரம்ப் வரியை அறிவித்த உடனேயே கச்சா எண்ணெய் விலை 2 டாலர் வரை சரிந்துள்ளது.
பிரெண்ட் பியூச்சர்ஸ் சட்டென $1.97 அல்லது 2.63% குறைந்து ஒரு பீப்பாய்க்கு $72.98க்கு வர்த்தகமாகிறது.. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் $1.98 அல்லது 2.76% குறைந்து $69.73க்கு வர்த்தகமாகிறது. இது வரும் காலங்களில் மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இதுபோல சரிவதால் அதிகம் பாதிக்கப்படுவது மத்திய கிழக்கு நாடுகளாகவே இருக்கும். ஏனென்றால் உலகின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி தென்கிழக்கு நாடுகளில் இருந்தே வருகிறது.
டிரம்ப்
அமெரிக்காவை மீண்டும் உலகின் முதன்மை நாடாக மாற்றவே இந்த வரிகளை அறிவிப்பதாக டிரம்ப் கூறுகிறார். மேலும், வரி அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 2ம் தேதி அமெரிக்காவின் உண்மையான விடுதலை நாள் என்றெல்லாம் சொல்கிறார். ஆனால், இந்த வரி அறிவிப்புகள் சர்வதேச வணிகத்தையே தலைகீழாக மாற்றக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
சட்டென மாறிய நிலை
டிரம்ப் வரிகளை அறிவிக்கும் வரை கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்தே இருந்தது. ஆனால், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட வெளியிட நிலைமை மாறியது. குறிப்பாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% வரியை அறிவித்த டிரம்ப், வரி இருக்கக்கூடாது என்றால் அமெரிக்காவிலேயே உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்த கச்சா எண்ணெய் விலை மொத்தமாகச் சரிந்தது.
பாதிப்பு எவ்வளவு மோசம்
இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் பிஜார்ன் ஷீல்ட்ராப் கூறுகையில், "இது வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி மற்றும் எண்ணெய் தேவை என அனைத்தையும் பாதிக்கும். சர்வதேச பாதிப்புகள் மொத்தமாகத் தெரியவில்லை.. பாதிப்புகள் சிறிது சிறிதாகத் தெரிவதால் ஒட்டுமொத்தமாகப் பாதிப்பு எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை" என்றார்.
என்ன காரணம்
இந்த புதிய வரிகளில் இருந்து எண்ணெய், எரிவாயு இறக்குமதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகை கூறியது. ஆனால், டிரம்பின் இந்த வரிகள் பணவீக்கத்தை அதிகரிக்கலாம்.. பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்கும். உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்தைப் பாதிக்கும் என்ற அச்சத்தால் கச்சா எண்ணெய் விலை விலை தொடர்ந்து குறைந்தே வருகிறது.
இந்தியாவில் குறையுமா
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் வரி உட்பட பல்வேறு விஷயங்கள் இருப்பதால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பது குறித்த முடிவை மத்திய அரசே எடுக்கும்.












Click it and Unblock the Notifications