கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு!
வாஷிங்டன்: பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலான ஹார்முஸ் ஜலசந்தி (hormuz strait)... உலக எரிசக்தி (Crude oil) வர்த்தகத்தின் முக்கிய புள்ளி. ஆனால், மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்த ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் 60 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகத்தான் வந்தது. போர் காரணமாக ஈரான் இந்த பாதையை மூடியதும், இந்தியாவின் எரிசக்தி தேவை நெருக்கடிக்கு உள்ளானது.
இந்த சூழலில், தூரத்து நண்பனான அர்ஜென்டினா கைகொடுத்துள்ளது. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா, 2026ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 50,000 டன் எல்பிஜியை (LPG) இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2025ம் ஆண்டு முழுவதும் இந்தியா அர்ஜென்டினாவிலிருந்து வாங்கிய மொத்த எல்பிஜியின் அளவு 22,000 டன்தான். இப்போது மூன்று மாதங்களில் அதை விட இரட்டிப்புக்கும் மேல் இறக்குமதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போரும் பின்னணியும்
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் உலக எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை, இது இன்னும் முக்கியமானது. நம் நாட்டின் எல்பிஜி தேவையில் பெரும் பகுதி வெளிநாடுகளிலிருந்து வரும் இறக்குமதியை சார்ந்துள்ளது. இந்த சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதும் இந்தியா மாற்று வழிகளை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நெருக்கடியான நேரத்தில்தான் அர்ஜென்டினா முன்வந்தது. எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி, ஈரான் போர் தொடங்கும் முன்பே 39,000 டன் எல்பிஜி அர்ஜென்டினாவின் பஹியா பிளாங்கா துறைமுகத்திலிருந்து இந்தியா வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 5ம் தேதி மேலும் 11,000 டன் எல்பிஜி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தகம்
அர்ஜென்டினா 2024ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு எல்பிஜி வழங்கியதில்லை. இப்போது, இந்தியாவின் எல்பிஜி சந்தையில் அர்ஜென்டினா தனது இருப்பை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அர்ஜென்டினா தூதர் மரியானோ அகஸ்டின் கௌசினோ இது குறித்து கூறுகையில், "அர்ஜென்டினாவிடம் மிகப்பெரிய அளவில் எரிவாயு கையிருப்பு உள்ளது. நீண்டகாலத்திற்கு இந்தியாவுக்கு எரிவாயு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
"எங்கள் தேசிய எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் கடந்த ஆண்டு இரண்டு முறை இந்தியா வந்தார். இந்திய எரிசக்தி நிறுவனங்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பல சந்தர்ப்பங்களில் மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் புரியையும் அவர் சந்தித்தார். இந்த ஒத்துழைப்பு இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. ஆனால், தற்போதைய சூழ்நிலை இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பை மேலும் விரைவுபடுத்தும்," என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் உத்தி
இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே எரிசக்தி கொள்முதலை பன்முகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பாராளுமன்றத்தில் கூறியது போல, 40க்கும் மேற்பட்ட நாடுகளிடமிருந்து எரிசக்தி பெறும் உத்தியை இந்தியா வகுத்து வருகிறது. அந்த உத்தியின் ஒரு பகுதியாகத்தான் அர்ஜென்டினாவுடனான இந்த ஒத்துழைப்பு உருவாகியுள்ளது.
அர்ஜென்டினா தூதர் கூறுகையில், "இந்தியா, இந்த உலகிலேயே, நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வருகிறது, விரைவில் மூன்றாவது இடத்தை அடையும். இந்திய நாடு, ஒரு பெரிய எரிசக்தி இறக்குமதியாளர். கடந்த சில ஆண்டுகளாக எரிசக்தி விநியோகத்தில் பன்முகப்படுத்தல் உத்தியை இந்திய அரசு பின்பற்றி வருகிறது. இது மிகவும் சாதகமான விஷயம். விவசாயம் மற்றும் கனிமத் துறைகளில் இரு நாடுகளும் மிகவும் சாதகமாக ஒத்துழைத்து வருகின்றன. இப்போது எரிசக்தி துறையிலும் புதிய பார்ட்னர்ஷிப்பை உருவாகியுள்ளது," என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பங்கு
தற்போது இந்தியா அர்ஜென்டினாவின் ஐந்தாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. அர்ஜென்டினாவின் ஏற்றுமதிக்கு இந்தியா முக்கிய சந்தையாக விளங்குகிறது. சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தோல், தானியங்கள், ரசாயனங்கள், பருப்பு வகைகள் போன்றவை அர்ஜென்டினாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் முக்கிய பொருட்களாகும். இப்போது, ஹைட்ரோகார்பன் மற்றும் முக்கிய கனிமங்கள் துறையிலும் ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது.
தூரம்தான் பெரிய சவால்!
அர்ஜென்டினா இந்தியாவுக்கு எல்பிஜி வழங்கத் தயாராக இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தூரம்தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள அர்ஜென்டினாவிலிருந்து இந்தியா வரையிலான கப்பல் பாதை உலகின் மிக நீண்ட பாதைகளில் ஒன்றாகும். அர்ஜென்டினாவின் பஹியா பிளாங்கா துறைமுகத்திலிருந்து குஜராத்தில் உள்ள தாஹேஜ் துறைமுகத்துக்கு சுமார் 19,000 முதல் 20,000 கிலோமீட்டர் தூரம் ஆகும். இதனால் கப்பல் கட்டணம் அதிகரிக்கிறது, விநியோக சங்கிலியில் தாமதம் ஏற்படுகிறது. நீண்ட தூரப் பயணத்தில் வானிலை பிரச்சினைகளும் குறிப்பிடத்தக்கவை.
ஆனாலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தேவையும், அர்ஜென்டினாவின் ஏற்றுமதி ஆர்வமும் இந்த ஒத்துழைப்பை பலப்படுத்துகின்றது. மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக எரிசக்தி விநியோகத்தை பன்முகப்படுத்த இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும்.
எதிர்காலம் என்ன?
அர்ஜென்டினா தற்போது இந்தியாவுக்கு எல்பிஜி வழங்கத் தொடங்கியிருந்தாலும், இது நீண்டகால ஒத்துழைப்பாக மாற வாய்ப்புள்ளது. அர்ஜென்டினாவிடம் ஏராளமான இயற்கை எரிவாயு இருப்பு உள்ளது. அதை பயன்படுத்தி, இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய முடியும். குறிப்பாக, தென் அமெரிக்க நாடுகளுடன் இந்தியாவின் உறவு பல்வேறு துறைகளிலும் வலுப்பெற்று வரும் இந்த நேரத்தில், எரிசக்தி துறையில் இந்த ஒத்துழைப்பு மேலும் ஆழமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி இந்தியாவுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. ஒற்றை ஆதாரத்தை மட்டும் சார்ந்திருக்காமல், பல்வேறு நாடுகளிலிருந்து எரிசக்தி ஆதாரங்களைப் பெறுவதன் முக்கியத்துவத்தை இந்த நெருக்கடி உணர்த்தியுள்ளது. அந்த வகையில், அர்ஜென்டினா இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தூரத்து நண்பன் அர்ஜென்டினா, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு பயணத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளான்!
-
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான்












Click it and Unblock the Notifications