உஷார்: ஓமிக்ரான் பரவலால் மருத்துவமனைகளில் பெட் கிடைக்காது! அமெரிக்க அரசின் மருத்துவ ஆலோசகர் வார்னிங்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், அறிகுறிகள் குறைவாக இருந்தாலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளை மூழ்கடிக்கும் அளவுக்கு இருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உயர் மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஷி கூறியுள்ளார்.
கொரோனாவை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் உலகநாடுகள் பலவற்றில் தனது கோர தாண்டவத்தை தொடங்கியுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மருத்துவ ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் பாதிப்பு
அமெரிக்காவில் தினசரி ஓமிக்ரான் நோய்த்தொற்று பாதிப்பு டெல்டா வைரஸ் பாதிப்பை விட அதிகமாக உள்ளது என்று முன்னணி செய்தி நிறுவனமான சிஎன்என் தெரிவித்துள்ளது. பல அமெரிக்க விமான நிறுவனங்கள் வார இறுதி விடுமுறைக்கு பின்னர் கிட்டத்தட்ட 1,900 விமானங்களை ரத்து செய்துள்ளன. இதன் பின்னணியில் விமான நிறுவன ஊழியர்கள் ஓமிக்ரன் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

சிக்கிய ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து தற்போதைய ஆய்வு முடிவுகளில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, கொரோனாவின் டெல்டா வைரஸை விட தற்போது ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்காக இருந்தாலும் , ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளதன்படி, டெல்டா வகை வைரஸைவிட ஓமிக்ரான் பாதிப்பு 10 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதும் , இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஆலோசகர் எச்சரிக்கை
இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், அறிகுறிகள் குறைவாக இருந்தாலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளை மூழ்கடிக்கும் அளவுக்கு இருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உயர் மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஷி கூறியுள்ளார். ஏபிசி தலைமை நிருபரிடம் இதுகுறித்து பேசியுள்ள ஃபாஷி, அதிக அளவு பாதிப்பு ஏற்படும் போது ஏற்கனவே திட்டமிட்டுள்ள முன்னேற்பாடுகளை சிதைத்துவிடும் எனவும், எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

படுக்கைகள் கிடைக்காது
மருத்துவமனைகள் குறைவாக உள்ள பகுதிகளில், தடுப்பூசி செலுத்தாதவர்கள் அதிகம் இருப்பது, தீவிரத்தன்மையை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் அலட்சியம் காட்டுவதும் , சுகாதார கட்டமைப்பில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள அவர், இதே அலட்சியம் தொடர்ந்தால் வரும் காலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் , நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலை ஏற்படலாம் என ஆண்டனி ஃபாஷி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications