ஏஐ-யால் இந்தியாவில் ஐடி துறைக்கு பெரும் சிக்கல்.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பரபர பேச்சு!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ஏஐ-யால் இந்தியாவில் ஐடி துறைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், வேலை வாய்ப்பின்மை பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். தனது பாரத் ஜோடோ யாத்திரை குறித்தும் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் பேசினார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:- இந்தியா மட்டும் இன்றி மேற்கத்திய நாடுகளிலும் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை நிலவுகிறது. வேலை வாய்ப்பின்மை என்பது சர்வதேச அளவில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. சீனா, வியட்நாம் போன்ற சில நாடுகள் மட்டும் இந்த சவாலை சமாளிக்கின்றன.
இதற்கு உலகளாவிய உற்பத்தி மேற்கு நாடுகளில் இருந்து தென்கொரியா, ஜப்பான் இறுதியாக சீனாவுக்கு மாறியதே காரணம். இந்தியா தனது உற்பத்தித் துறையை மறுமதிப்பீடு செய்து மேம்படுத்த வேண்டும். உள்நாட்டு உற்பத்தி திறன்களை மேம்படுத்துவது நாட்டின் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்க்கவும், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் உதவும்.
ஜனநாயக சூழலில் உற்பத்தி துறையில் நாம் எப்படி முதலிடம் பிடிப்பது என சிந்தித்து பார்க்க வேண்டும். ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையால் இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப துறை மிக்கப்பெரிய சிக்கலை சந்திக்க போகிறது. இந்தியாவுக்கு திறமையில் சிக்கல் இருப்பதாக பலர் கூறுகிறார்கள். திறமைகளை மதிப்பதில்தான் இந்தியாவுக்கு சிக்கல் இருப்பதாக நான் கருதுகிறேன்.
ஏற்கனவே இருக்கும் திறன்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் நான் நம்பவில்லை. கல்வி முறையை பொறுத்தவரை இந்தியாவின் திறன் கட்டமைப்போடு எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை. தற்போதுள்ள கல்வி முறையில் மிகப்பெரிய பிரச்சினை கருத்தியலாகத்தான் உள்ளது. இந்திய அரசியலில் அன்பை புகுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டேன். பாரத் ஜோடோ யாத்திரை மூலம் எனது எண்ணம் நிறைவேறியது.
பேசுவதை விட கேட்பதே மிகவும் முக்கியமானது. கேட்பது என்றால் உங்களை ஒரு நிலையில் நிறுத்திக் கொள்வது என்று அர்த்தம். ஒரு விவசாயி பேசினால், அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைக்குள் செல்ல நான் முயற்சிப்பேன். அவர்களின் பிரச்சினை என்ன என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பேன். எனவே கேட்பது என்பதுதான் அடிப்படையான விஷயம்.
அனைத்து பிரச்சினைகளையும் ஒருவரால் எழுப்ப முடியாது. ஒரே ஒரு முக்கியமான விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். அதற்காக போராடுங்கள். ஒருவர் தங்களின் போராட்ட களத்தை கவனமாக தேர்வு செய்யவேண்டும். எதிர்கட்சியின் முக்கியமான நோக்கம் என்னவென்றால் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதுதான். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications