நியூசிலாந்தை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்.. இருளில் மூழ்கிய நகரங்கள்..அவசர நிலை பிறப்பிப்பு
நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் அந்நாட்டில் தேசிய அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: நியூசிலாந்தில் மழை வெள்ள பாதிப்புக்கு இடையே சக்திவாய்ந்த புயலும் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் பல இடங்கள் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டில் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் விரைவாக உதவிகளை செய்வதற்கு ஏதுவாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக நியூசிலாந்து விளக்கம் அளித்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக கனமழை கொட்டியது.
அந்த நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கொட்டி தீர்த்த கனமழையால் ஆக்லாந்து நகரம் வெள்ளக்காடானது. நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த புயல்
மழை தொடர்பான சம்பவங்களில் பாதித்து 4 பேர் உயிரிழந்தனர். அதேபோல பலகோடிக்கணக்கான ரூபாய் பொருட்சேதத்தையும் இந்த வெள்ளம் ஏற்படுத்தி விட்டு சென்றது. மழை வெள்ள பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில் அங்கு தற்போது புயல் தாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வடக்கு பகுதிகளில் 'கேப்ரியல்' என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.

சாலைகளில் வெள்ளம்
இந்த புயலால் நார்த்லேண்ட், ஆக்லாந்து உள்பட 6 பிராந்தியங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. புயலின் வேகத்தில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் விழுந்தன. பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ததால் ஆக்லாந்து உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தன. நகரின் பிரதான சாலைகளில் கூட வெள்ளம் போல மழை நீர் ஓடியது. இதனால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கார்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகளும் அங்குள்ள உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

விமான சேவை பாதிப்பு
புயல் காரணமாக மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் அடியோடு சரிந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. மோசமான வானிலை தொடர்ந்து நிலவுவதால் மின்சார வினியோகம் சீராக மேலும் சில நாட்கள் ஆகலாம் என்றும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். புயல் மற்றும் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

தேசிய அவசரநிலை பிரகடனம்
கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளும் முழு வீச்சில் நண்டைபெற்று வருகிறது. இதற்கிடையே நியூசிலாந்து நாட்டில் தேசிய அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் விரைவாக உதவிகளை செய்வதற்கு ஏதுவாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக நியூசிலாந்து விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications