'மிக பெரிய அச்சுறுத்தல்..' இப்படியொன்றை பார்த்ததில்லை.. மிரளும் அமெரிக்கா.. ஏன் தெரியுமா
வாஷிங்டன்: கொரோனா வைரஸை அழித்தொழிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு டெல்டா உருமாறிய கொரோனா தான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என அமெரிக்கத் தொற்று நோய் வல்லுநர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளது கொரோனா வைரஸ் தான். வளரும் நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்கா முதலில் தடுமாறினாலும், பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு, வைரஸ் பாதிப்பைச் சிறப்பாகவே கையாண்டுள்ளது.

அமெரிக்காவில் டெல்டா
அமெரிக்காவில் சில காலமாக வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி டெல்டா வகை கொரோனா வைரசே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவும் என்பதால் பாதிப்பு அதிகம். தற்போது அமெரிக்காவில் கண்டறியப்படும் வைரஸ் பாதிப்புகளில் 20% டெல்டா கொரோனா வகையால் ஏற்படுவதாகும்.

மிகப் பெரிய அச்சுறுத்தல்
இது பற்றி அமெரிக்கத் தொற்றுநோய் வல்லுநர் அந்தோணி பாசி கூறுகையில், "பிரிட்டன் நாட்டைப் போலவே கொரோனாவை அழிக்கும் டெல்டா தான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அதேநேரம் தடுப்பூசிகள் டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக நல்ல பலன் தருகிறது. இது நல்ல விஷயம். அதாவது இந்த உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்தும் டூல்கள் நம்மிடம் உள்ளது. நாம் அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

பிரிட்டனில் என்ன நிலை
பிரிட்டன் நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவை விட டெல்டா வகை மிக வேகமாகப் பரவுகிறது. தற்போது பிரிட்டன் நாட்டில் உறுதி செய்யப்படும் வழக்குகளில் 90% டெல்டா கொரோனா தான். டெல்டா பிளஸ் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது மற்றொரு சிக்கலான செய்தியாகும்.

சரியாகக் கையாள வேண்டும்
டெல்டா கொரோனா பரவல் குறித்து அந்தோணி பாசி கூறுகையில், "இந்த டெல்டா கொரோனா சிறார்கள்(5-12) மற்றும் இளைஞர்கள்(12-24) மத்தியில் வேகமாகப் பரவுகின்றன. இது மிகப் பெரிய சிக்கல். இதனை நாம் சரியாகக் கையாள வேண்டும். பைசர் கொரோனா வைரஸ் டெல்டா கொரோனாவுக்கு எதிராக 88% தடுப்பாற்றலை கொண்டுள்ளது. இது ஆல்பா கொரோனாவுக்கு எதிராக 93% தடுப்பாற்றலை கொண்டிருந்தது" என்றார்.

கொரோனா வேக்சின்
டெல்டா கொரோனா வைரசுக்கு எதிராக வேக்சினின் தடுப்பாற்றல் குறைகிறது என்றாலும்கூட அது பலனளிக்காமல் செல்வதில்லை. அதிலும் குறிப்பாக டெல்டா கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பூசிகள் தடுப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. எனவே வேக்சின் பணிகளை வேகப்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.
Recommended Video

உருமாறிய கொரோனா வகைகள்
அமெரிக்காவில் இப்போது ஆல்பா B.1.1.7 , பீட்டா B.1.351, காமா P.1, எபிஸ்சலான் B.1.427, டெல்டா B.1.617.2 ஆகிய உருமாறிய கொரோனா பரவல் உள்ளன. இருப்பினும், டெல்டா கொரோனா வகையே முக்கிய பிரச்சினையாக உள்ளது. அமெரிக்க அரசு டெல்டா கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாக அறிவித்துள்ளது. டெல்டா வகை கொரோனாவால் அடுத்த அலை ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பார்த்தது இல்லை
இது குறித்து பேலர் மருத்துவக் கல்லூரியின் டாக்டர் பீட்டர் ஹோடெஸ் கூறுகையில், "நாங்கள் பார்த்த அனைத்து கொரோனா வகைகளிலும் இதுதான் மிக வேகமாகப் பரவுகிறது. இப்படி வேகமாகப் பரவும் கொரோனாவை இதுவரை பார்த்ததில்லை. பிரிட்டன் நாட்டில் என்ன நடந்தது என்று பார்க்கிறோம். அங்கு ஊரடங்கை நீட்டிக்கும் முடிவுக்கு டெல்டா கொரோனா தள்ளியுள்ளது. இது அமெரிக்காவில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கவலையாக உள்ளது" என்றார்












Click it and Unblock the Notifications