கழுத்துக்கு போன பிரஷர்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த டிரம்ப்? வழியில்லாமல் ஓடி வந்த பாகிஸ்தான்!
வாஷிங்டன்: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில காலமாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதை டிரம்ப் தான் முதலில் அறிவித்தார். ஆனால், இரு நாட்டு வெளியுறவுத்துறை அறிவிப்பில் டிரம்ப் குறித்து எதுவும் இல்லை. இதனால் டிரம்ப்பிற்கு இதில் என்ன கனெக்ஷன் என்ற கேள்வி இயல்பாகவே பலருக்கும் எழுந்தது. இதற்கிடையே டிரம்ப்பிற்கு இதில் இருந்த பங்கு குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அதை முறியடித்த இந்தியா, தக்கப் பதிலடியையும் கொடுத்தது. இதை எதிர்பார்க்காத பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்டது.

அதிபர் டிரம்ப்
இதற்கிடையே இந்த மோதல் முடிவுக்கு வந்ததாக முதலில் டிரம்ப் தான் ட்விட்டரில் அறிவித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் ட்வீட் செய்திருந்தார். மிக நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே மோதலை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்
இருப்பினும், அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்திரி, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது குறித்து எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ 3.55 மணியளவில் கால் செய்து போர் நிறுத்தம் குறித்துப் பேசியதாகவும் இந்தியா அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் மட்டும் கூறியிருந்தார்.
டிரம்ப் என்ன செய்தார்?
பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்ட மோதல் நிறுத்தம் குறித்த அறிவிப்பிலும் கிட்டதட்ட இதே பாயிண்டு தான் இருந்தது. அவர்கள் வெளியிட்ட அறிவிப்பிலும் கூட இதில் அமெரிக்க அதிபர் பேச்சுவார்த்தை நடத்தியதாக எந்தவொரு கருத்தும் இல்லை. இரு தரப்பும் இப்படிச் சொல்ல.. அதிபர் டிரம்ப் ஏன் அதுபோல சொன்னார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இதற்கிடையே இது தொடர்பான தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ஐஎம்எஃப் கடன் விவகாரத்தில் தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் கடன் வாங்கியது அனைவருக்கும் தெரியும். பாகிஸ்தான் பொருளாதாரம் சில ஆண்டுகளாகவே மோசமாக இருந்ததால் அதை மேம்படுத்த 8,500 கோடி கடன், அதாவது ஒரு பில்லியன் டாலர் கடன் கேட்டிருந்தது. இருப்பினும், பாகிஸ்தானுக்குக் கடன் கொடுக்கவே கூடாது என இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பாகிஸ்தானுக்கு அழுத்தம்
கடந்த 35 ஆண்டுகளில் பாகிஸ்தான் 28 முறை முறை கடன் வாங்கியதாகக் குறிப்பிட்ட இந்தியா, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை ஐஎம்எப் அமைப்பிடம் கடன் கேட்டுள்ளதாகத் தெரிவித்தது. இருப்பினும், ஐஎம்எஃப் நிதியைச் செயல்படுத்த எந்தவொரு அமைப்பும் பாகிஸ்தானில இல்லாததால்.. எந்தவொரு திட்டமும் மக்களிடம் சென்று சேரவில்லை என்று இந்தியா குற்றஞ்சாட்டியது. இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கப்பட்டது. அது தொடர்பான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கும் ஆப்ஷன் இல்லாததால் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது.
இதற்கிடையே IMF கடனை வைத்தே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதற்கட்டமாக ஒரு பில்லியன் லோனை தர வேண்டும் என்றால் சண்டை நிறுத்தத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா நேரடியாக பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுத்துள்ளது. இதைச் செய்தால் மட்டுமே கூடுதல் கடன் குறித்து யோசிக்கவே செய்யும் என்றும் அமெரிக்கா மிகக் கடுமையான அழுத்தத்தை பாகிஸ்தானுக்குக் கொடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை
சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கு இருக்கும் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். அமெரிக்கா நினைத்தால் ஐஎம்எஃப் அமைப்பில் இருந்து பாகிஸ்தானுக்குப் பணம் செல்வதைத் தடுத்து நிறுத்த முடியும். இது பாகிஸ்தானுக்கும் தெரியும். இதன் காரணமாகவே வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் இறங்கி வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டிரம்ப் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் பங்குபெறவில்லை என்றாலும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாகவே பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் செய்ய ஓகே சொல்லியுள்ளது.












Click it and Unblock the Notifications