IT டூ மருந்து வரை.. டிரம்பின் 25% வரியால் இந்தியாவில் பாதிக்கப்படும் துறைகள் இதுதான்.. லிஸ்ட்
டெல்லி: நாளை முதல் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதிக்க உள்ளார். அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகத்தை தொடர்ந்தால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டி உள்ளார். இதனால் நம் நாட்டில் ஐடி, மருந்து, ஜவுளி உள்பட பல்வேறு முக்கிய துறைகள் பாதிப்பை சந்திக்க உள்ளது. அது என்னென்ன துறைகள்? எப்படி பாதிப்பை சந்திக்க போகிறது? என்பது பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை முதல் நம் நாட்டுக்கு வரிகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும்.

இதனால் நம் நாட்டின் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும். அதோடு கூடுதல் வரி விதிப்பால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதி சரியவும் வாய்ப்புள்ளது.
25 சதவீத வரி
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப், ‛‛உலகிலேயே மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. அனைத்து நாடுகளையும் விட கொடுமையான, விரும்பத்தகாத வர்த்தக தடைகளை இந்தியா வைத்துள்ளது. எனவே ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியும், ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாக கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும்'' என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
என்னென்ன துறைகள் பாதிப்பு?
இந்த வரி விதிப்பு நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம் செய்வது தொடர்பாக மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் நம் நாட்டில் எந்தெந்த துறைகள் பாதிக்கப்படும் என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி நம் நாட்டின் எலக்ட்ரானிக்ஸ், மருந்து துறை, நகைகள் மற்றும் ரத்தினங்கள் சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட உள்ளது. அதேபோல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலும் பாதிக்கப்பட உள்ளது. ஐடி துறை மறைமுகமா பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் தொழில்
அதன்படி மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் உள்ளிட்ட சுத்திகரிப்பு நிலையங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் போன்ற தனியார் துறை நிறுவனங்களும் பாதிக்கப்பட உள்ளது. ஏனென்றால் நம் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவிடம் இருந்து தான் 37 சதவீதம் கிடைக்கிறது. ரஷ்யா உடனான வர்த்தகத்தை மையப்படுத்தி தான் நம் நாட்டை டிரம்ப் குறிவைத்துள்ளதால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையயங்கள் பாதிப்பை எதிர்கொள்ள உள்ளன.
எலக்ட்ரானிக்ஸ்
அமெரிக்க மார்க்கெட்டுக்கு ஐபோன்களை சப்ளை செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறார். சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி உள்ளது. இதற்கு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை இந்தியாவில் அசெம்பிள் செய்து ஏற்றுமதி செய்வது தான் காரணம். தற்போதை வரி எலக்ட்ரானிக்ஸ் துறையும் பாதிக்கப்பட உள்ளது. இதனால் ஆப்பிள் தனது செயல்பாட்டை இந்தியாவில் குறைக்க வாய்ப்புள்ளது.
ரத்தினங்கள் மற்றும் நகைகள்
அதேபோல் அமெரிக்காவின் வரியால் ரத்தினங்கள் மற்றும் நகை தொழில் பாதிப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‛‛அமெரிக்காவின் கூடுதல் வரி ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. பொது விநியோக சங்கிலி முறியும்போது ஏராளமான தொழில்கள் பாதிக்கப்படும். குறிப்பாக ரத்தின கற்கள் துறை பாதிக்கப்படும்'' என்று கூறியுள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ரத்தினங்கள் மற்றும் நகைகள் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதியாகிறது. இப்போது கூடுதல் வரி விதிக்கப்பட்டால் அந்த தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மருந்து துறை
அமெரிக்காவின் மருந்து சந்தையில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் மதிப்புள்ள காப்புரிமை பெறாத மருந்துகள் நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாக்டர் ரெட்டி'ஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் மற்றும் சிப்லா லிமிடெட் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களின் வருவாயில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை அமெரிக்காவில் இருந்து கிடைக்கின்றன. இதனால் மருந்து துறையும் பாதிக்கப்பட உள்ளது.
IQVIA டேட்டாவின்டி இந்திய மருந்து நிறுவனங்கள் 2022ம் ஆண்டில் அமெரிக்காவில் 40 சதவீத மருந்து தேவைகளை பூர்த்தி செய்தது. அதோடு அமெரிக்காவில் குறைந்த செலவில் பிரச்சனைகளை குணப்படுத்தும் மருந்தாக நம் நாட்டின் மருந்துகள் இருந்து வருகின்றன. நம் நாட்டின் மருந்துகளால் அமெரிக்காவில் 2022ம் ஆண்டில் மட்டும் 220 பில்லியன் டாலர் அளவுக்கு சேமிப்பு ஏற்பட்டுது. அதேபோல் 2022ம் ஆண்டுடன் முடிவடைந்த 10 ஆண்டு காலத்தில் 1.3 டிரில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவுக்கு மிச்சமானது. தற்போது இந்தியாவின் மருந்துகளுக்கு வரி விதிக்கும்போது அது நம் நாட்டுக்கு மட்டுமின்றி அமெரிக்கா மக்களுக்கும் கூடுதல் செலவை ஏற்படுத்தும்.
ஜவுளி மற்றும் ஆயத்தஆடை
அமெரிக்காவில் வர்த்தகங்களை மேற்கொண்டு வரும் தி கேப் இன்க்., பெப்பே ஜீன்ஸ், வால்மார்ட் இன்க். மற்றும் காஸ்ட்கோ ஹோல்சேல் கார்ப் போன்ற முக்கிய நிறுவனங்களுக்கு நம் நாட்டில் இருந்து ஜவுளி, ஆயத்த ஆடைகள், காலணிகள் செல்கின்றன. இப்போது அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்த பொருட்களின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட உள்ளன.
ஆட்டோ மொபைல்ஸ்
நம் நாட்டில் இருந்து கார்கள் மற்றும் ஆட்டோ மொபைல்ஸ்களுக்கான உதிரி பாகங்கள் ஏற்றுமதியாகிறது. இதனால் இந்த துறை பாதிக்கப்படலாம். குறிப்பாக டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஜாக்குவார் லேண்ட் ரோவர் ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐடி துறை
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நம் நாட்டில் ஐடி துறையில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனாலும் கூட ஐடி துறையில் குறிப்பிடும்படியான விளைவுகளை ஏற்படுத்தலாம். இதனால் அதிகரிக்கும் செலவினங்களால் அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்ப செலவினங்களை குறைக்க வாய்ப்புள்ளது. இது நம் நாட்டின் ஐடி துறையில் பாதிப்பை தரலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications