"நீங்க எழுந்து நில்லுங்க.." சர்வதேச அரங்கில் அதட்டிய டிரம்ப்! திருதிருவென விழித்த பாகிஸ்தான் பிரதமர்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய டிரம்ப், பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அப்போது ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் பிரதமரை எழுந்து நிற்கச் சொன்ன டிரம்ப், சட்டென இந்தியா பற்றியும் மோடி பற்றியும் பேச ஆரம்பித்தார். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் பாகிஸ்தான் பிரதமர் நின்று கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்த போர் கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து காசாவை மறுசீரமைப்பு செய்வதே இப்போது முக்கிய வேலையாக இருக்கிறது. இதற்காக டிரம்ப் தரப்பு அமைதி வாரியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த அமைதி வாரியத்தின் முதல் கூட்டம் இன்று அமெரிக்கத் தலைநகர் வெள்ளை மாளிகையில் நடந்தது.

எழுந்து நில்லுங்க
இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே இந்த நிகழ்வில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் இந்தியா பாகிஸ்தான் மோதல் தொடர்பாகவும் அதன் தான் ஆற்றிய பங்கு தொடர்பாகவும் பேசியிருந்தார்.
இந்தியா பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக மீண்டும் சொன்ன டிரம்ப், அங்கிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பை பார்த்தார். "நீங்கள் எழுந்து நில்லுங்கள்.. இப்போது ஒரு நொடி எழ வேண்டும் என நினைக்கிறேன்" என்று நேரடியாகவே ஷெரீப்பை பார்த்துக் கூறினார். இதனால் ஷெரீப்பும் பள்ளிக் குழந்தை போல சட்டென எழுந்து நின்றார்.
யூடர்ன் போட்ட டிரம்ப்
பிறகு பாகிஸ்தான் பற்றி டிரம்ப் பேசப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் சட்டென யூடர்ன் போட்டு இந்தியா பற்றிப் பேச ஆரம்பித்தார். அங்குப் பேசிய டிரம்ப், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரம் ஒரு பெரிய விஷயமாக இருந்தது. நீங்கள் எழுந்து நின்றதற்கு மிக்க நன்றி. நான் பிரதமர் மோடியுடன் பேசினேன். அவர் உற்சாகமாக இருக்கிறார். அவர் இந்த நிகழ்வை நிச்சயம் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார் என நம்புகிறேன்" என்றார்.
விழித்த ஷெரீப்
டிரம்ப் சொன்னதால் ஷெரீப் எழுந்து நின்றார். சரி, பாகிஸ்தானைப் பற்றித் தான் பேசப் போகிறார் என்று ஷெரீப் ஆர்வமாக எதிர்பார்த்தார். ஆனால், டிரம்ப் இந்தியாவைப் பற்றியும் பிரதமர் மோடி பற்றியும் பேச ஆரம்பித்தார். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் ஷெரீப் திருதிருவென விழித்தார். இது குறித்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
டிரம்ப் தொடர்ந்து பேசுகையில், "பாகிஸ்தான் பிரதமர் நமது தலைமை அதிகாரி முன்னிலையிலேயே இது குறித்துப் பேசியிருந்தார். அதிபர் டிரம்ப் தான் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தினார் என்றும் இதன் மூலம் 2.5 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் என்னைப் பாராட்டினார். அந்தப் போர் மிக உக்கிரமாக இருந்தது. பல விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நான் இரு நாடுகளுடனும் தொடர்ந்து பேசினேன்.
200% வரி
எனக்குப் பிரதமர் மோடியை நன்கு தெரியும். இதனால் நான் நேரடியாக அவரிடம் பேசினேன். மோடிக்கு போன் போட்டு, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால் நான் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்யப் போவதில்லை என்றேன். இரு நாடுகளுக்கும் 200 சதவீதம் வரி விதிப்பேன் என்றேன். அதன் பிறகே போர் முடிவுக்கு வந்தது.
ஆரம்பத்தில் இரு நாடுகளுமே போரிட விரும்பியது. வரி என்ற சொன்ன பிறகே இரு நாடுகளும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்டது. 11 விலையுயர்ந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நாங்கள் சண்டையை விரும்பவில்லை. இதன் காரணமாகவே மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தோம்" என்றார்.












Click it and Unblock the Notifications