"பைத்தியம் மாதிரி" எலான் மஸ்க் சொன்ன அந்த வார்த்தை.. கண்கள் சிவக்கும் டிரம்ப்! அடுத்து என்ன நடக்குமோ
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கும் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்கிற்கும் இடையே சில வாரங்களுக்கு முன்பு தான் மோதல் வெடித்திருந்தது. இரு தலைவர்களும் மாறி மாறி விமர்சித்து வந்தனர். இதற்கிடையே இப்போது மீண்டும் டிரம்ப்பின் புதிய மசோதாவை எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க செனட் சபையில் டிரம்ப்பின் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதை டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரருமான எலான் மஸ்க் மீண்டும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த மசோதா முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது என்றும் பேரழிவை ஏற்படுத்தும் ஒன்று என விமர்சித்துள்ளார். இந்த மசோதா மீது செனட் சபை விவாதம் நடத்தத் தயாராகி வரும் நிலையில், எலான் மஸ்க் இதைக் கூறியிருக்கிறார்.

பைத்தியக்காரத்தனமானது
இந்த மசோதா குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டரில், "செனட் சபையின் இந்த மசோதா அமெரிக்காவில் பல லட்சம் பேரின் வேலைகளை அழித்து, நமது நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும். குடியரசுக் கட்சித் தலைவர்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற முயல்வதைக் கைவிட வேண்டும். இது முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது மற்றும் அழிவுகரமானது. எதிர்காலத் தொழில்களைக் கடுமையாகப் பாதிக்கும் அதேநேரம், கடந்த காலத் தொழில்களுக்கு இது சலுகைகளை வழங்குகிறது" என்று சாடினார்..
அதேநேரம் இந்த மசோதாவை எலான் மஸ்க் விமர்சிப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே இந்த மாதத் தொடக்கத்தில் எலான் மஸ்க் இந்த மசோதாவை வெறுக்கத்தக்க அறுவறுப்பானது எனச் சாடியிருந்தார். அப்போது அவர், "இந்த மிகப் பெரிய, அநியாயமான மசோதா ஒரு அருவருப்பான ஒன்று. இதற்கு ஆதரவாக இருப்போர் வெட்கப்பட வேண்டும்: நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று அப்போதே சாடியிருந்தார்.
எலான் மஸ்க் vs டிரம்ப்
எலான் மஸ்கின் இந்தக் கருத்து காரணமாகவே அப்போது டிரம்ப் உடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. அப்போது இருவருமே மாறி மாறி விமர்சித்தனர். மோசமான கருத்துகளை முன்வைத்தனர். இந்த மோதல் சில நாட்கள் தொடர்ந்த நிலையில், அதன் பிறகே மோதல் முடிவுக்கு வந்தது. இந்தச் சூழலில் தான் மீண்டும் எலான் மஸ்க் இந்த மசோதாவை விமர்சித்துள்ளார்.
எலான் மஸ்க் மேலும் தனது ட்விட்டரில், "இந்த மசோதா உண்மையில் யாருக்கும் பயனைத் தராது. மாறாக இந்த மசோதா கடன் உச்சவரம்பை 5 டிரில்லியன் டாலர்கள் உயர்த்துகிறது.. இது வரலாற்றில் மிகப் பெரிய அதிகரிப்பு ஆகும். இது அமெரிக்காவைக் கடனாளியாக்கும் பாதையில் வேகமாகக் கொண்டு செல்கிறது" என்று எச்சரித்துள்ளார்.
டிரம்ப் மசோதா சொல்வது என்ன!
940 பக்கங்கள் கொண்ட இந்த மசோதா சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கிறது. அதே நேரத்தில், பாதுகாப்பு மற்றும் குடியேற்ற அமலாக்கத்திற்கான செலவினங்களை அதிகரிக்கிறது. குறிப்பாக, மருத்துவ உதவி மற்றும் உணவுப் பொருள் உதவிக்கான நிதியும் இதில் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் டிரம்பின் எல்லைப் பாதுகாப்புத் திட்டத்திற்கு 350 பில்லியன் டாலர் ஒதுக்கப்படுகிறது. எல்லைச் சுவரைக் கட்ட 46 பில்லியன் டாலர்களும், குடியேற்றத் தடுப்பு மையத்திற்கு 45 பில்லியன் டாலர்களும், சுமார் ஆயிரம் குடியேற்ற அதிகாரிகளைப் பணியமர்த்தக் கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடு கடத்தும் நடவடிக்கையை டிரம்பால் ஆரம்பிக்க முடியும். இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேரை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற முடியும்.
எலான் மஸ்க் கோபப்பட என்ன காரணம்!
டிரம்பின் இந்த நடவடிக்கை ஏன் எலான் மஸ்க்கை கோபப்படுத்துகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். விஷயம் என்னவென்றால் டிரம்பின் இந்த மசோதா எலக்டிரிக் கார்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்துகிறது. இதனால் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்படும். எலான் மஸ்க் கோபப்பட இதுவே காரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications