இந்திய அரசியலில் அன்பு, மரியாதை எல்லாம் இல்லாமல் போய்விட்டது.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
வாஷிங்டன்: ராகுல் காந்தி இப்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு டெக்சாஸில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது லோக்சபா தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி மீதான பயத்தை மக்கள் இழந்துவிட்டதாக தெரிவித்த அவர், லோக்சபா தேர்தல் முடிவுகள் என்பது பல கோடி மக்களின் விருப்பத்தின் பிரதிபலிப்பு என குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இப்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி டெக்சாஸில் அவர் இந்தியர்களிடையே பேசினார்.

ராகுல் காந்தி பேச்சு: அப்போது அவர் லோக்சபா தேர்தல் முடிவுகள், ஆர்எஸ்எஸ்- காங்கிரஸ் வேறுபாடு என பல விவகாரங்கள் குறித்தும் பேசினார். லோக்சபா தேர்தலுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக மீது மக்களுக்கு பயம் போய்விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் உள்ள ராகுல் காந்தி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்வில் அங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே பேசினார். அப்போது தான் ராகுல் காந்தி இந்த கருத்துகளை தெிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், "2024 லோக்சபா தேர்தலுக்கு பிறகு இங்கு பல விஷயங்கள் மாறிவிட்டது. குறிப்பாக பாஜக மீதான பயம் மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது. தேர்தல் முடிவு வந்த சில நிமிடங்களில் இந்த மாற்றம் நடந்துவிட்டது. இந்தியாவில் பாஜக அல்லது இந்தியப் பிரதமரைக் கண்டு யாரும் பயப்படவில்லை என்பதை நாங்கள் பார்த்தோம்.
இந்திய மக்களின் விருப்பம்: இந்த லோக்சபா தேர்தல் முடிவு என்பது எனக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ கிடைத்த வெற்றி இல்லை. இது இந்திய மக்களின் விருப்பத்தின் பிரதிபலிப்பு. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக மதிப்புகளை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை இந்திய மக்கள் தடுத்து நிற்கிறார்கள். எங்கள் மதத்தின் மீதும், எங்கள் மாநிலத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதலை நாங்கள் ஏற்கப் போவதில்லை என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முக்கிய கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன. இந்தியா என்பது ஒரே கருத்தியல் என ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால், பல கருத்தியல்கள் சேர்ந்தது தான் இந்தியா என்பதை நாங்கள் நம்புகிறோம்.
வேறுபாடுகள்: ஜாதி, மதம், மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிரிவு மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் (ஆர்எஸ்எஸ்) பார்வை இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இதுதான் மோதலின் அடிப்படை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமர் மோடி சீர்கலைக்க முயல்கிறார் என்பதை இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதுவே தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது.
அரசியலமைப்பை பாதுகாக்க தவறிவிட்டது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு பாதுகாக்க தவறிவிட்டது என்பது தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிரொலித்தது. தேர்தலில் மக்கள் அதை தெளிவாகப் புரிந்துகொண்டனர். இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி எழுப்பிய போது அதை மக்கள் புரிந்துகொண்டார்கள். அரசியலமைப்பை தாக்குவது என்பது இந்திய பாரம்பரியத்தை தாக்குவதற்கு சமம் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications