பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர்.. மகத்தான பணிகளை செய்து வருகிறார்.. புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர் என்றும், மகத்தான பணிகளை செய்து வருவதாகவும் பாராட்டிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு தன்னை விட சிறந்த நண்பர் கிடைக்கப் போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவி வகித்தவர் டொனால்டு டிரம்ப்.
தனது பதவிக்காலத்தில் அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்கிய டொனால்டு டிரம்ப், கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.

டொனால்டு டிரம்ப்
டிரம்ப் ஆட்சி காலத்தில் பிரதமர் மோடிக்கும் டிரம்புக்கும் நல்ல நட்புறவு இருந்தது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்பும் பிரதமர் மோடியில் ஒரே மேடையில் பங்கேற்றனர். இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் ''அப்கிபார் டிரம்ப் சர்க்கார்'' என்று பேசியது பெரும் பேசுபொருளானது. அதேபோல், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்ற டிரம்ப், அங்கு கிரிக்கெட் அரங்கத்தை கூட்டாக திறந்து வைத்தனர்.

தேர்தலில் போட்டியிட முடிவு
இப்போதும் ஆக்டிவாக அரசியல் செய்து கொண்டிருக்கும் டொனால்டு டிரம்ப் அடிக்கடி ஜோ பைடனை சரமாரியாக விமர்சித்தும் வருவார். அண்மையில் கூட டொனால்டு டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை அள்ளிச்சென்றனர். அமெரிக்காவில் அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள டொனால்டு டிரம்ப் அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

சிறந்த உறவு
இந்த நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளார். டொனால்டு டிரம்பிடம் ஜோ பைடன் மற்றும் ஒபாமாவைவிட இந்தியாவுடன் நீங்கள் நல்லுறவு கடை பிடித்தீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கொடுத்த டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியிடம் நீங்கள் இதைப் பற்றி கேட்க வேண்டும். ஆனால் அதிபர் டிரம்புடன் நீங்கள் கொண்டிருந்ததை விட சிறந்த உறவை நீங்கள் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்'' என்றார்.

மோடி நல்லவர்
மேலும் கூறுகையில், ''பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்தது. நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர் என்றே நான் கருதுகிறேன். மகத்தான பணிகளை அவர் செய்து வருகிறார். அவருக்கு கிடைத்திருக்கும் பொறுப்பு எளிதானது கிடையாது. ஒருவொருக்கொருவர் நீண்ட காலமாக அறிந்து இருக்கிறோம்'' என்றார். மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. நான் போட்டியிட வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். தேர்தல்களிலும் நான் முன்னிலை வகிக்கிறேன். விரைவில் இது குறித்து நான் முடிவு எடுப்பேன்.












Click it and Unblock the Notifications