அமெரிக்க அதிபர் பதவியே போய்விடும்.. திடீரென கட்சியினரிடம் புலம்பி தள்ளிய டிரம்ப்.. என்னாச்சு?
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றார். அதன்பிறகு அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் திடீரென்று டொனால்ட் டிரம்ப் தனது அதிபர் பதவிக்கே ஆபத்து வந்துவிடும் என்று தனது சொந்த கட்சியினரிடம் புலம்பி தள்ளி உள்ளார். அவரது புலம்பலின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2024ம் ஆண்டு கடைசியில் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று 2025 ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்றார்.
அதன்பிறகு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒவ்வொரு நாடுகளுக்கும் வரி போடுவது, அமெரிக்க குடியுரிமை சார்ந்த விதிகளை மாற்றுவது என்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக எதிரியாக இருந்த தனது அண்டை நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அந்த நாட்டுக்குள் நுழைந்தே டிரம்ப் தனது சிறப்பு படை பிரிவினரால் கைது செய்துள்ளார். தற்போது நிகோலஸ் மதுரோ அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். டிரம்ப் பதவியேற்று இன்னும் ஓராண்டுகள் முடியாத நிலையில் தற்போது அவர் தனது பதவிக்கே ஆபத்து வந்துவிடும் என்று கட்சியினரிடம் புலம்பி உள்ளார்.
வாஷிங்டனில் டொனால்ட் டிரம்ப் தனது கட்சி எம்பிக்கள் மத்தியில் பேசினார். அப்போது, ‛‛இடைக்கால தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. நவம்பரில் நடைபெறும் தேர்தலில் நம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற தவறினால் என்னை பதவி நீக்கம் செய்வார்கள்'' என்று கூறியுள்ளார். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.
அதாவது அமெரிக்காவில் புதிய அதிபர் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். ஒவ்வொரு முறையும் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் 2வது ஆண்டை நிறைவு செய்யும் நேரத்தில் அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் (Midterm Election)நடக்கும். இந்த தேர்தல் என்பது அமெரிக்காவில் கீழ்சபையாக இருக்கும் காங்கிரஸ் சபையில் 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட்டில் உள்ள 100 இடங்களில் 3ல் ஒரு பகுதியாக 33 அல்லது 34 இடங்களுக்கும் நடக்கும்.
இந்த தேர்தல் என்பது அதிபரின் 2 ஆண்டு ஆட்சிக்கு மக்கள் வழங்கும் மதிப்பெண்ணாக பார்க்கப்படும். இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். மாறாக பைடன், கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றால் அது டொனால்ட் டிரம்புக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். பொதுவாக இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கட்சி தோற்றாலும் கூட அவரது அதிபர் பதவிக்கு பிரச்சனை வராது.
ஆனால் புதிதாக ஏதாவது சட்ட திருத்தம், விதிகளை கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ், சென்ட் சபைகளில் ஆதரவு வேண்டும். ஆனால் தேர்தலில் தோற்றால் டிரம்புக்கான ஆதரவு கிடைக்காது. இதனால் அவர் முழு சுதந்திரத்துடன் அதிபராக செயல்பட முடியாது. எதிர்க்கட்சியான ஜனநாய கட்சியினரின் ஆதரவை பெற வேண்டும்.
அதுமட்டுமின்றி காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளில் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி டிரம்புக்கு எதிராக குற்றவியல் நடைமுறையை கொண்டு வரலாம். டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி கூறி அவருக்கு நெருக்கடியை கொடுத்து பதவி நீக்கம் வரை கொண்டு செல்லலாம்.
தற்போதே ஜனநாயக கட்சியை சேர்ந்த பலரும் டொனால்ட் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். குறிப்பாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்த விஷயத்தில் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் நடைபெற உள்ள இடைக்கால தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் கட்சி பின்னடைவை சந்தித்தால் அவருக்கு சிக்கல் வரலாம் என்பதால் டொனால்ட் டிரம்ப் இப்படி புலம்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications