H-1B விசாக்களை தடை செய்தால்.. அமெரிக்காவில் மரணங்கள் அதிகரிக்கும்! நிபுணர்கள் எச்சரிக்கை
வாஷிங்டன்: அமெரிக்காவில் H-1B விசாக்கள் மூலம் ஏறத்தாழ 1 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் H-1B விசாக்களை தடை செய்ய வேண்டும் என்று, ஆளும் குடியரசு கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அப்படி தடை செய்தால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். அதேபோல அமெரிக்காவில் அதிக அளவில் மரணங்கள் ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் க்ரீன், H-1B விசாக்களை தடை செய்யும் சட்ட முன்மொழிவை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறார். இது குறித்து பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இந்தியர்களுக்கு ஆபத்து
Third Way என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சாரா பியர்ஸ், இது குறித்து கூறுகையில் "H-1B விசாக்களை தடை செய்வது அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மிகச் சிறந்த வழிகளில் ஒன்று. இப்படியான திட்டம் நேர்மையற்றது மற்றும் ஆபத்தானது. ஒருவேளை இந்த விசா தடை அமல்படுத்தப்பட்டால், அது அமெரிக்கப் பொருளாதாரத்தையும், முக்கியத் துறைகளையும் அச்சுறுத்தலாக அமையும். இப்போது ஆண்டுக்கு 85,000 H-1B விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதை 10,000 குறைக்க வேண்டும் என்பதே டெய்லர் க்ரீனின் நோக்கம்.
அமெரிக்காவில் மரணம்
இந்த 10,000 விசாக்களும் அனைத்து தரப்பினருக்குமானது கிடையாது. வெறும் மருத்துவ நிபுணர்களுக்கானது மட்டுமே. பிரச்சனை என்னவெனில் 85,000 விசாக்களில், குறிப்பிட்ட அளவு விசாக்கள் மருத்துவ நிபுணர்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே மருத்துவ நிபுணர்கள் 40,000 பேர் வரை கூட இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த எண்ணிக்கையை 10,000 ஆக சுருக்கினால், அமெரிக்க மருத்துவமனைகளில் ஏற்படும் திடீர் மரணங்களை தடுக்க முடியாது" என்று பியர்ஸ் கூறியிருக்கிறார்.
இந்தியர்களின் நிலைமை என்னவாகும்?
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், அடுத்த பத்தாண்டுகளில் விசா எண்ணிக்கைகள் படிப்படியாக குறைக்கப்படும். இந்த மசோதாவில் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. அதாவது H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு குடியுரிமை பெறுவதற்கான வழியை நீக்கி, அவர்களின் விசா காலாவதியான பிறகு சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பவும் இந்த திட்டம் வழி வகுக்கிறது. அமெரிக்காவில் H-1B விசா மூலம் ஒவ்வொரு ஆண்டும் 60,000 இந்தியர்கள் வரை கிரீன் கார்டு பெறுகிறார்கள். கிரீன் கார்டு என்பது அமெரிக்காவின் குடியுரிமையை பெறுவதற்கான வழி.
அமெரிக்க குடியுரிமையும் இந்தியர்களும்
கிரீன் கார்டு பெற்றால், அமெரிக்க மக்களுக்கு வழங்கப்படும் பெரும்பாலான உரிமைகள், சலுகைகளை பெறுவீர்கள். அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கலாம். ஆனால் ஓட்டு போட முடியாது. ஒருவேளை நீங்கள் அமெரிக்காவை விட்டு வெளிநாடுகளில் ஓராண்டுக்கு மேல் தங்கினால் உங்களுக்கு அளிக்கப்பட்ட கிரீன் கார்டு திரும்பப்பெறப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, கிரீன் கார்டு பெற்று, குடியுரிமை பெற 5-15 ஆண்டுகள் ஆகும். குடியுரிமை மட்டுமே பாதுகாப்பானது. ஒருமுறை நீங்கள் அமெரிக்க குடிமகனாக ஆகிவிட்டால் அதை யாராலும் மீண்டும் பறிக்க முடியாது.
சுமார் 11 லட்சம் இந்தியர்கள் H-1B விசா மூலம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, அங்கு கிரீன் கார்டு பெற காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே பெற்றவர்களில், ஆண்டுக்கு சுமார் 90,000 வரை குடியுரிமை பெற்று வருகிறார்கள். இது எல்லாவற்றிற்கும் வேட்டு வைக்கும் விஷயம்தான் மார்ஜோரி டெய்லர் க்ரீன் முன்மொழிய உள்ள H-1B விசா தடை திட்டம்.












Click it and Unblock the Notifications